Skip to content

கவின்

poet kavin

Menu
  • முகப்பு
  • கவிதைகள்
  • ஹைக்கூ
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • நூல்கள்
  • பதிப்பு
  • அறிமுகம்
Menu

மலைத்தேனும் கிளி ஜோசியரும்

Posted on May 21, 2023May 21, 2023 by Kavin

“இன்னும் மக்கள்” என்ற தலைப்பில் 1-5-1991-இல் புஷ்கின் இலக்கியப் பேரவை வெளியீடாக வந்த ஹைக்கூ கவிதைகளின் கூட்டுத்தொகுப்பினைத் தொகுத்தவர்கள் த.சலாவுத்தீன், பழநிபாரதி, எம்.எஸ் தியாகராஜன் ஆகியோர். மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என்று மூன்று பிரிவுகளில் நடந்த ஹைக்கூ போட்டிகளுக்கு வந்த கவிதைகளின் தொகுப்பு. பரிசளித்த விவரங்களையும் இணைத்திருக்கிறார்கள். ஹைக்கூவைப் பொறுத்த வரையில் ஆய்வு நோக்கில் அதன் பரிணாம நிலைகளைப் பார்க்கையில் முன் வெளிவந்த அல்லது எழுதப்பட்ட ஹைக்கூக்களை உட்படுத்துவது அவசியமாகிறது. தொடக்ககால நூலான “இன்னும் மக்கள்” என்னும் இந்தக் கூட்டுத் தொகுப்பில் ஹைக்கூவிற்கான ஆய்வுக்களங்கள் மிகுதியாக இருக்கின்றன. ஹைக்கூவையும் சென்ரியூவையும் பொதுமையில் ஹைக்கூ என்றே அழைத்து அவற்றை ஹைக்கூக்கள் என்றே வெளியிடவும் செய்த சூழல் பதிவாகின்றது.

ஹைக்கூ எழுதத் தொடங்கப்பட்ட காலத்தில் அவை ஹைக்கூ இலக்கண மரபை மீறியவையாக இருந்தாலும் தமக்கென ஒரு சந்த ஒழுங்கைக் கொண்டிருப்பனவாகத் தோன்றும் அளவு அதன் வடிவத்தின் மீது நெறியாள்கையும் அதீத கவனமும் இருந்திருக்கின்றன. உதாரணமாக விவரிப்புப் போல அமைந்த கவிதைகள். தேர்தல், பிறைநிலா, அலைகள், சுமைதாங்கி, கல், வெங்காயம், கண்கள், இடிந்த வீடுகள், நடக்கும் மரங்கள், சிரித்தது நிலா, சுருண்டது கொசு, வங்கியில் வட்டி என்று நிறைவுபெறும் கவிதைகள் ஏராளம் உண்டு இத்தொகுப்பில். இவை எழுதப்பட்டபோதே இவ்வாறு எழுதப்பட்டனவா? அல்லது தொகுக்கப்பட்டபோது நெறியாக்கத்தில் இவ்வாறு அமைந்துள்ளனவா? என்ற ஐயமும் எழுகிறது. அச்சந்தேகத்தினை உறுதிப்படுத்துவதுபோல அமைகின்றன அனேக ஹைக்கூக்களின் இடையில் வைக்கப்பட்டிருக்கும் முற்றுப்புள்ளிகளும் நிறுத்தக் குறியீடுகளும். நிறுத்தக்குறிகள் மற்றும் வடிவம் சார்ந்து ஒரே இரசனையும் போக்கும் வெளிப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

எண்ணற்ற உணர்வு நிலைகள் மற்றும் காட்சிப் பதிவுகள் இருக்கும் இத்தொகுப்பில் முத்தாய்ப்பாய் ஒரு ஹைக்கூ இருக்கிறது. சற்றேறக்குறைய ஜப்பானிய ஹைக்கூ போலவே அமைந்து நம்மைப் வாசிப்பின் பரவசத்தில் ஆழ்த்துகிறது. பரிசோ கவனமோ நிகழாமல் இக்கவிதைத் தொகுப்புக்குள்ளிருந்து வெளிப்படுகின்றது.

கொடிய விலங்குகள் வாழும் காடு
அதனால் என்ன
மலைத் தேன்

என்ற ஹைக்கூதான் அது. க.ராதா எழுதிய அக்கவிதை ஹைக்கூவின் தன்மைக்கேற்ப நன்மையின் பக்கம் நின்று ஒரு காட்சியை உணர்த்துகிறது. மலைத்தேனின் கொண்டாட்ட மனநிலைகொண்ட இக்கவிதையை உவப்பானதாக மாற்றிவிடுகிற வாசிப்புச் சுவையினை நாமும் உள்வாங்கி உணரமுடிகின்றது. ஹைக்கூவுக்குள் இவ்வாறு சிறியதொரு கேள்வி கேட்பது நாடகப்பாங்காக இருந்தாலும் கூட இயல்பின் போக்கில் அமைந்து மேலும் நெருக்கம் கொள்கிறது. ஜப்பானிய ஹைக்கூ முன்னோடி பாஷோவின் ஹைக்கூகளிலும் இவ்வாறான சிறிய கேள்விகளை, சிலாகிப்புகளை, ஆச்சர்ய விவரிப்புகளைப் பார்க்க முடியும். ஹைக்கூவைப்போலவே பல சென்ரியூ கவிதைகளும் இத்தொகுப்பில் இருக்கின்றன.

இத்தொகுப்பின் சென்ரியூ கவிதைகள் காலமாற்றம் கடந்து இன்றைய நிலையோடும் ஒத்திசைவதாக அமைகின்றன. இரசனை அடிப்படையிலும், சொல்லும் முறைமை சார்ந்தும் பல நல்ல கவிதைகள் இடம்பெற்றுள்ளன. படித்த உடன் ஒரு புன்னகை வரும் அளவிற்கான கவிதைகளும் உண்டு. சமூக அவலநிலைகள் பல உண்டு, அவற்றிலிருந்து வருடங்கள் சற்றேறக்குறைய முப்பதானாலும் இன்னும் சமூகமாற்றம் அடையாத போக்கினை உணர முடிகின்றது. அந்த அவலச் சுவையும் படைப்பாளன் மற்றும் கவிதை வாசிப்பாளனின் கையறு நிலையின் ஆற்றாமை உணர்வும் கவிதைகளில் பிரதிபலிக்கின்றன. அதே சமயம் ஏதேனுமொரு வகையில் படைப்பின் மூலமும் அப்படைப்பின் பகிர்வுகளின் மூலமும் நிகழ்ந்துவிடும் என்ற நம்பிக்கைவாதத்தின் உள்ளுணர்வுச் செயல்பாடாக இக்கவிதைகள் படைக்கவும் தொகுக்கவும் பட்டிருக்கின்றன என்பது உறுதியாகிறது. மேலும் ஆங்கில வார்த்தைகள் கலப்பானதும் நிகழ்ந்திருக்கின்றன.

சென்ரியூ கவிதைகளின் இயல்புத்தன்மை வாழ்வின் பல முக்கியக்கூறுகளைப் பதிவு செய்வதுதான். எடுத்துக்காட்டாகப் பின்வரும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் வாசிப்புச்சுவையினை அளிப்பதோடு இன்றைய வாழ்வியலோடும் தொடர்பிலிருப்பதை உணரமுடிகின்றது. புகார்பெட்டியின் பூட்டு காணாமல் போனது அன்று என்றால், புகார் பெட்டியே காணாமல் போவது இன்று என்று வேண்டுமானால் முன்னேற்றம் நடந்திருக்கிறதேயன்றி தீர்வுக்கான முனைப்புகளும் வழிகளும் சாதாரணர்களுக்கு இன்னும் புலப்படவில்லையென்பதே நிதர்சனம். தாயின் சேலை கிழிந்துவிட்டால் தங்கைக்குத் தாவணியாயிற்று என்ற பரவலாக அறியப்பட்ட என்.டி.ராஜ்குமார் அவர்களின் கவிதையும் இத்தொகுப்பிலுள்ளது. மேலும் மதுவினால் ஏற்படும் பாதிப்புகளும் ஈராக் போர் தொடர்பான கவிதைகளும் தென்படுகின்றன. வடிவம், பாடுபொருள், செறிவு சார்ந்த முன்னேற்றம் தற்காலத்து ஹைக்கூவிற்கு இருக்கின்றன என்றாலும் தமிழரின் வாழ்நிலையானது இந்த முப்பது ஆண்டுகளில் வளமான முன்னேற்றம் அடைந்திருக்கின்றது என்று உறுதியாகச் சொல்ல முடியாத இலக்கியப் பிரதிகளாக இந்தக் கவிதைகள் அமைந்திருக்கின்றன.

1

கண்கள் சிவக்கட்டும்
கைகள் உயரட்டும்
வரிசையில் டிக்கட் வாங்கும்போது – பூ.மு.ரமேஷ்

2

புகார்ப் பெட்டி
திறந்து கிடந்தது
பூட்டைக் காணவில்லை. – சூர்யாதேவி

3

எத்தனை நீளக் ‘க்யூ’
என்னவாயிருக்கும்?
ஏசி ரூமில் கிளி ஜோசியர்! – வேடந்தாங்கல் சுகுணன்

4

கிழிந்தது சேலை
பரவாயில்லை
தங்கைக்குத் தாவணி. – என்.டி.ராஜ்குமார்

5

கார் வந்தது
முல்லை சிரித்தது
பாரியைக் காணோம். – க.இராமசாமி

6

கைக்கெட்டாத தூரத்தில்
காய்கறிகள்….அதனாலென்ன
மலிவு விலையில் மது – லஷ்சராமன்

உள்ளபடியே ஹைக்கூவும் சென்ரியூவும் சமூக மாற்றத்திற்கான தீர்வுகளை பெருமளவு முன்வைக்காவிட்டலும்கூட அவற்றைக் குறிப்பிட்டுப் பதிவு செய்யும் வகையில் இன்றியமையாத இடத்தினைப் பெறுகின்றன. இத்தொகுப்பின் கவிதைகளும் அவ்வாறே பயணிக்கின்றன. கருத்துச் செறிவின்மையோடு அபத்தச்சுவையளிக்கும் சில கவிதைகள் ஆங்காங்கே தென்பட்டாலும்கூட அவை மிகுதியென்று கூறிடவியலாது. எல்லாக் காலத்திலும் கவிதையானது அவ்வகையாகச் செறிவோடும் அதற்கான முனைப்போடும்தான் எழுதப்பட்டுக்கொண்டிருகின்றது என்ற அறிதலோடு பயணிக்கையில் புரிதல் சாத்தியப்பட்டாலும் ஆய்வு நோக்கில் அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இதனையே தொகுப்பாசிரியர்களும் “புஷ்கின் இலக்கியப் பேரவை நிகழ்த்திய ஹைகூ கவிதைப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து கவிஞர்கள் பங்குபெற்றார்கள், அவர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. பல கவிதைகள் ஹைகூவுக்கு எந்தவிதத்திலும் பொருந்தாமல் அமைந்திருந்தன. நல்ல ஹைகூ கவிதைகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்கதாயிருந்தது. இந்நூல் அனைத்துக் கவிஞர்களும் பங்களிக்கும் விதமாய் விரிவான ஜனநாயகத் தளத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது.” என்று ஒப்புதல் வாக்குமூலமாய் அளித்துள்ளார்கள். ரவி சுப்பிரமணியன், தஞ்சை சுகன், பேராசிரியர் முத்துராமலிங்க ஆண்டவர் பேராசிரியர் லட்சராமன் போன்ற தற்காலத்தில் இலக்கியப் பங்களிப்பாற்றிவருவோரின் இளமைக்காலக் கவிதைப் பங்களிப்பையும் அறியமுடிகின்றது.

1.

குப்பைக் காகிதங்கள்.
ஏழையின் கோணிக்குள்
கிரகப் பிரவேசம். – மலர்ப்பித்தன்

2.

காக்கையே
திருடக் கற்றுக்கொடு
நான் நாளைய அரசியல்வாதி. – கோ.மோகன்ராஜ்

3.
பேச்சு வார்த்தை
கோப்பின் மீது
மண்டை ஓடு – செங்கதிர் வாணன்

4.

காதலிக்குக் கடிதம் போட்டேன்
பதில் வந்தது, தபால் தலையை
காதலிக்கிறேன் என்று. – அ. ஆரோக்கியராஜா அந்தோனி

5.

எலிக்குப்
பல் உடைந்தது
பிளாஸ்டிக் ஆப்பிள்.- சுகன்

6.

எங்களூர் மளிகைக் கடையில்
கலப்பு மணம்
தேங்காயெண்ணெய்யும் விளக்கெண்ணெய்யும். – இரா.சுப்பிரமணியன்

போன்ற விசித்திரச் சுவையினை உண்டாக்குகிற கோணங்களிலும் சில கவிஞர்கள் சிந்தித்திருக்கிறார்கள். எண்ணங்களுக்கும் படைப்பாற்றலுக்கும் எல்லையில்லை என்றாலும்கூட மேற்கண்டவகைக் கவிதைகள் ஹைக்கூ வடிவத்திற்கு உரியவைதாமா? என்ற கேள்வியை முன்வைத்து ஆய்வுசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இக்கவிதை வடிவத்தின் அடிப்படையினின்றும் விலகியிருத்தலால்தான் அவ்வகை உணர்வு நமக்கு ஏற்படுகின்றது. அதிர்ச்சியூட்டுகின்ற பார்வைகள், சராசரிக்கும் குறைவான இரசனையுள்ள வெற்று நகைச்சுவைகள், வேடிக்கை, விநோத, விசித்திரக் காட்சிகள் போன்றவை எழுதப்பட்டுள்ளன.

இலக்கிய வகையாகவும் வகைமையாகவும் அமைந்திருக்கின்ற ஹைக்கூ தன் பரிணாம வளர்ச்சியின் விளைவாகக் காலந்தோறும் புரிதலின் அடிப்படையிலும், பயிற்சியின் அடிப்படையிலும், சூழலின் அடிப்படையிலும், சமுதாயப் பின்புலத்தின் அடிப்படையிலும் தனது பங்களிப்பினைச் செய்துவருகிறது. அவ்வகையில் “இன்னும் மக்கள்” என்ற கூட்டுத்தொகுப்பு சமூக மாற்றத்திற்குத் தனது இருப்பினை வெளிப்படுத்தியும் பல ஆக்கப்பூர்வமான முன்வைப்புகளைச் செய்ததன் மூலமும் குறிப்பிடத்தக்கதொரு பிரதியாக உருவெடுக்கின்றது. பலர் ஹைக்கூ வகைமையை முயற்சித்துப் பார்த்த வகையிலும் அது உறுதிப்படுகின்றது. “வாழ்க்கையை அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறது. ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு அசைவிலும் அதன் இயல்போடு வாழ்வைத் தரிசிக்கிறது.” என்று இத்தொகுப்பின் தொகுப்பாசிரியர் உரையில் பழநிபாரதி குறிப்பிடுவது பொருந்துகிறது. மிகச் சிறப்பானதொரு முன்னெடுப்பு நிகழ்ந்திருப்பதை அறிந்துகொள்ள முடிந்தபொழுது மகிழ்ச்சி மேலிடுகிறது.

 

 

 

இத்தளம் பற்றி

கவின்

வழிப்போக்கனின் தேநீர் இடைவேளையில் கோப்பையைக் கையில் வருடிப்பற்றிக்கொண்டு பகிரப்படும் சின்னஞ்சிறிய உரையாடல்கள் இவை. வெறுமையும், உன்மத்தமும், சமநிலையும் அக்கணம் பொழிகின்ற பூவுதிரல். எழுத்தின்வழி சிறிதேனும் உணரத்தலைப்படும் காலம் மற்றும் காலமற்ற நினைவாடல் பரவசம்.

www.poetkavin.com

தேடுதலுக்கு

அண்மைப் பதிவுகள்

  • ஆத்மாநாமின் நினைவு நாளில் சில கவிதைகள்
  • மலைத்தேனும் கிளி ஜோசியரும்
  • விக்கிரவாண்டி உணவு விடுதிகள்
  • நெகிழ்ச்சியின் கண்ணீர்த்துளி
  • ஒளியிடமிருந்து ஒரு செம்புலம்பல் பக்கம்

கால வரிசை

  • July 2023
  • May 2023
  • April 2023
  • March 2023

ஆசிரியரைத் தொடர்புக்கொள்ள :

poetkavin@gamil.com
+91 99420 50065

நூல்கள் பெற

இடையன் இடைச்சி நூலகம்
அரச்சலூர்,
ஈரோடு - 638101
Online Book Store :
www.tamilhaiku.com
Contact Number :
9841208152

Categories

  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • பத்தி எழுத்து
  • ஹைக்கூ
© 2023 கவின் | Powered by Superbs Personal Blog theme