தமிழ்நாட்டில் நீண்டதூரப் பேருந்துப் பயணங்களில் விக்கிரவாண்டிப் பகுதி உணவு விடுதிகள் இன்றியமையதவை. முன் எப்போதும் இல்லாத வகையில் பல மாற்றங்கள் இப்போது காணக்கிடைக்கின்றன. அதிக ஒலியும் வீண் பரபரப்புகளும் உயர்ந்த விலைப்பட்டியலும் இப்போது இல்லை. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக என்று சொல்லப்படுகின்றது. அந்த வகையில் மிக்க மகிழ்ச்சி. ஆயினும் தரமான உணவில் தான் பிரச்சனை. பயணங்களுக்கு உகந்த இட்டிலிகள் இல்லையென்றே எப்போதும் சொல்கிறார்கள்.
தோசை மற்றும் பரோட்டாக்கள் கிடைக்கின்றன என்றாலும் தீனிவகைகளில் தான் ஏமாற்றம். ஊருக்குள் எங்கும் கிடைக்காத பெயர்களுடன் குறிப்பிட்ட யாரும் அறியாத பிராண்ட்கள் அச்சமூட்டுகின்றன. “யாரா இருப்பாங்க?” என்று அதன் பின்னால் இருக்கும் வர்த்தக அரசியலை நினையாமல் நொறுக்க முடிவதில்லை. யுனிபிக் மாதிரியைக் கொண்ட வேறு வடிவமைப்புகளில் அச்சு அசலாய் லேஸ் நொறுவை போலவே முன் அறிமுகம் இல்லாத புதிய சிப்ஸ்கள். தேநீரின் விலை 20 -இலிருந்து 15 க்கு வந்திருப்பது நன்று. தரம் முன்னுக்கு இப்போது பரவாயில்லை. கழிப்பறைகளில் கட்டணம் இல்லை என்பது பெரும் நிம்மதி தருகிறது. தூக்கக் கலக்கத்தில் சில்லறைக்கு பரபரக்கத் தேவையிருப்பதில்லை.
பேருந்தைத் தட்டிக் கூப்பாடு போட்டு பயமுறுத்துவதுபோல் உணவு நிறுத்தத்துக்கு எழுப்புவது குறைந்திருக்கிறது. பதிவுசெய்யப்பட்ட குரலோடு “பாலைஸ், கப்பைஸ்…” பாடல் லேகுலகுத லேகுலகுத எழுப்புவது நன்றாக இருக்கிறது. அதுவும் இரண்டு முறைதான் என்பது நன்று. இதோ ஊரு வந்திருச்சு இன்னும் கொஞ்ச தூரம் என்பது போல இன்னும் சிறிது நன் மாற்றங்கள் வேண்டுகிறேன். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய டாண்டீ தரத்திலோ காங்கேயம் பேருந்து நிறுத்த அரசு தேநீரகம் போலவோ எல்லா இடங்களிலும் டீ இருந்தால் அள்ளிக்கொள்ளலாம். வேறு எங்கும் அது இல்லை. பயணிகளில் தேநீர்ப் பிரியர்கள் அதிகம் இருப்பதால் தரமான டீ அனைத்து இடங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டும். அதே போல பதிவு செய்யப்படாத கதிகலங்கவைக்கும் அனாமத்து பிராண்ட்களையும் தடை செய்யப்பட வேண்டும்.
செய்த மாற்றங்களுக்கு நன்றி. ஓரளவு தரமான நிறைவான இரவுப் பயண உணவினை மனம் எதிர்பார்த்து ஏமாறுவது உண்மை. வழிமுறைகள் இலகுவாகிவிட்டன இனி தரத்தில் மாற்றம் வேண்டுகிறேன். அன்புடன்.