நிகழ்காலத்தின் இயல்புகளைக் கொண்டு வாழ்வின் பெருமதியை நினைவில் கிளர்த்தும் ஒரு திரைப்படம் குட் நைட். எட்டுப் பத்து இடங்களில் நெகிழ்ச்சியோடு கைதட்டி வாய்விட்டு வெடித்துச் சிரித்து இப்படி ஒரு திரைப்படம் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. குவாட்டர்ஸ் எனப்படும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியலை அச்சு பிசகாமல் காட்சிப்படுத்தியதும், “இந்தாங்க ட்ரெஸ்ஸுக்கு மேட்சா தேன் மிட்டாய்” என்பது போலக் குட்டிக்குட்டிப் பரவசங்கள் நிறைந்திருப்பதாகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. கேரளாவையும் வங்கத்தையும் சான்று காட்டிப் பேசுவதுபோல இனி மென் உணர்வு உறவுச் சிக்கல்கள் வகைக்குத் தமிழ்த் திரைப்படங்கள் நிச்சயம் பேசப்படும் என்ற நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்திருக்கிற திரைப்படம்.
“மோகன்கிற பேருக்கே ஆயிரம் பொண்ணு கிடைக்கும்டா”, “என்னைத் தவிர எல்லோரும் சந்தோஷமா இருக்கீங்கல்ல” என்பன போன்ற இடங்களில் அரங்கம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கிறது. பிரிவின் நிலையில் கணவனின் குறட்டை ஒலியை அலைபேசியில் கேட்கும் கதை நாயகியின் கண்களில் வழியும் கண்ணீருக்கு ஒரு பெரிய கைதட்டல் எழுகிறது. திரைப்படத்தில் மட்டுமல்லாமல் திரையரங்கில் இருந்தவர்களும் ஒருவருக்கொருவர் தழுதழுத்துக்கொண்ட கணம் அது.
மிகச் சிறப்பாக நடித்திருக்கும் மணிகண்டன், மீத்தா இருவரின் வாழ்விலும் குறட்டை ஒலி மையமான சிக்கலாக அமைந்தாலும் அதைச் சுற்றித் தொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையும் அதுகுறித்த மெல்ல நகரும் உரையாடலும், நல்லதொரு புதிய அனுபவத்தை மகிழ்ச்சியினூடே நமக்களிக்கிறது. சமூகம் நம் மீது திணித்திருக்கும் கற்பிதங்களை இரு மையக் கதாப்பாத்திரங்களான ஆண்களும் வெட்டி வீசிவிடவில்லை. நான் அவ்வாறு நினைக்கவில்லை, நான் அவ்வாறு கூறினேனா? என்பது போலவே மிகத் தன்மையான தொனியில் பதிவு செய்வதுதான் இத்திரைப்படம் தொடங்கியிருக்கும் கதையாடல். அவ்வாறு உடைத்தல் நிகழ வேண்டும் என்று பார்வையாளர் மனத்தினை விரும்பவைத்துவிட்டு நம்முடைய சூழலை மிகத் துல்லியமாக முன் வைக்கிறார்கள். அந்த அற்புத அனுபவம்தான் குட் நைட்.
பாலாஜி சக்திவேல், உமா ராமச்சந்திரன் இருவரின் வாழ்வும் ஒரு அழகிய கவிதையாக வடிக்கப்பட்டிருக்கிறது. தனியாக அவர்களின் வாழ்வை ஒரு திரைப்படமாக எடுக்கலாம் என்னும் அளவுக்கு ஆழமிக்க பாத்திரப் படைப்புகள். ரேச்சல் ரெபக்கா, ரமேஷ் திலக் இருவருடைய பாத்திரங்களையும் அவர்களின் நடிப்பாற்றலையும் எவ்வளவு போற்றினாலும் தகும். அதிலும் ரேச்சல் ரெபக்கா நடிப்பில் ஒரு மாயத்தை நிகழ்த்துகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். “ஏய் அழுவிறியா?” என்று அவர் கேட்பது ஒரு அசல் மனுஷி நேரடி வாழ்வில் சொல்வது போலவே இருக்கிறது.
நான் இத்திரப்படத்தில் மிக விரும்பியது காட்சிகள் நெடுகிலும் வரும் பெண் மையக் குரல். பிறருக்கு இவ்வளவு மெனக்கெடும் நீ என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்தாயா? என்றொரு கேள்வி. குடும்பச் சிக்கல்களினூடே கணவரைப் பார்த்து தல வலிக்குது வெளியே போலாம் கிளம்புங்க சினிமாவுக்கு என்றொரு அனாயசமான வெளிப்பாடு. கணவனின் தங்கைக்காக அப்பெண்ணின் உரிமைக்காக உயர்ந்தெழும் நாயகியின் குரல் எதார்த்தத்தில் உறைகிறது. இத்திரைக்கதையின் உச்சமாக அகம் சிலிர்க்கும் அவ்விடம் விளங்குகிறது. அக்குரலானது இறுதிக்காட்சியின் முடிவு வரை நீள்வது ஊடுபாவாய் மனதிற்கு நிறைவளிக்கிறது. குழந்தைக்காகத் தான் மகிழ்ச்சி எனில் இங்கு நான் யார்? என்ற கூர்மையான சுய பரிசோதனையும் கேள்வியும் பார்த்து உணர்ந்தால் மட்டுமே அகப்படும் திரையனுபவங்கள் அது.
உறவுகளுக்குள் தவறான புரிதல்களும் அவற்றை மீறி வெளிவர முடியாத கையறு நிலையும் மனிதரை எந்த அளவுக்கு நியாயமற்ற மறுமொழிகளைக் கொடுக்க வைக்கிறது என்றும் அந்த தகிப்பினால் உண்டாகும் வலிகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தச் சுட்டி நாய்க்குட்டி இருவருக்குமிடையில் ஒரு மெளனக் குறியீடாக உலவித் தூங்குகிறது. அவ்வளவு எளிதில் உடைத்துவிட முடியாத சுவர் அது. ஆணவம், கன்மம், மாயை என்ற மூலக்கூறுகள் தான். கவனம் எங்கின்ற சிற்றுளி கொண்டு பயிற்சியும் தீராத முயற்சியும் கொண்டால் நிச்சயம் அவற்றை உடைத்துவிட முடியும். இது அதற்கான காலமே.
சமையலறைச் சமத்துவம், கவித்துவமான பின் வயதுக் காதல், ஆங்கிலம் குறித்தான மனத்தடையை நீக்குதல் என்ற தளங்களில் சத்தமில்லாமல் முத்திரை பதிக்கிறது. மிகத் தீவிரமான தருணங்களைக் கூட முற்றிலும் புதியதொரு அனுபவமாக மாற்றிவிடுகிறது இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் பின்னணி இசை. பாடல்கள் மிகப் பிடித்திருக்கின்றன. வெவ்வேறு பின்புலங்களில் பாடல்கள் தனித்துவமாக வசீகரிக்கின்றன.
நகைச்சுவையும் அக உணர்வுகளும் சரிவிகிதத்தில் இருக்கும் பெருவியப்பான வெளிப்பாடு இத்திரைப்படம். நெகிழ்ச்சி மேலிட நம்பிக்கையின் ஒளியை மகிழ்ச்சி தோய்த்துக் கொடுத்திருக்கும் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் உணர்வுச் சக்கரத்தை மிகச் சாதுர்யமாக சுழற்றிக் காட்டியிருக்கிறார். அவருக்கும் திரைக் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்லதொரு திரை அனுபவத்தை முன்னெடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நல்லிரவு.