‘தடாகத்தில் பூத்திருந்த தாமரையைப் பறிக்க நீந்தினேன்
எனது கையின் ஒவ்வொரு அசைவிற்கும்
அது விலகிக்கொண்டே சென்றது
என்னால் அதைப் பறிக்கவே முடியவில்லை.’ – இரவீந்திரநாத் தாகூர்
நேற்றைய காலையிலிருந்து பகலில் பல முறை முயன்றும் கேட்கமுடியாமல் இருந்தது. இணையம், சூழல் முதலானவைகளால். இப்போது கேட்டேன். நன் முயற்சி. கொஞ்சம் புலம்புவோம் என்று ஸ்பாடிஃபை பக்கம் தொடங்கியிருக்கும் ஒளி முருகவேல் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும்.
ஆறாம் பகுதி எழுத்தாளர் ஷாலினி பிரியதர்ஷினியுடனான சிறப்பான பகிர்வு. தாகூரைப் பற்றிய இயல்பான நினைவாடலாக அவரின் பிறந்த நாளில் சிறப்பாக அமைந்திருந்தது. அறியாத பல தகவல்கள் கேட்கக் கிடைத்தன. தாகூரின் ஜப்பான் பயணத்தைப் பற்றிய ஒரு சிறிய ஆய்வில் ஈடுபடிருந்தேன் முன்னர். அது பற்றிய பேச்சு வருகையில் மகிழ்ந்தேன். இதே இலகுத் தன்மையுடன் தாகூரின் இலக்கியப் படைப்புகளை மட்டும் கூர் நோக்கியொரு முழுப் பகுதி வெளியிடுமாறு கோருகிறேன்.
எந்த நவீனத் தொழில் நுட்பமாயினும் அதில் இலக்கியத்தின் இடம் எதுவெனவே மனம் எண்ணும். இந்தக் குறிப்பிட்ட முயற்சியும் பாராட்டத்தக்கது, தொடர்ந்து கொண்டுசெல்லத் தக்கது. இலக்கியச் செயல்பாடுகளுக்கு உறுதுணையாகவும் ஆவணமாகவும் இருக்கும்.
தீவிர இலக்கிய உரையாடல்கள் இதில் வாய்ப்பில்லை எனக் கருதுவதற்கு இடமில்லை. காரணம் அநேகத் தீவிர உரையாடல்கள் தேநீர்ச் சந்திப்புகளிலும் அலைபேசி உரையாடல்களிலும் தான் நடைபெறுகின்றன என்பதை அறிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன். இதில் ஒரு பெரு நன்மையும் நல் வாய்ப்பும் அமைந்திருக்கின்றன, அரங்கம் குறித்த வழமையான கூற்றுகளும் பரபரப்புகளும் நேர வரைமுறைக் கட்டுப்பாடும் இன்றி அளவளாவ முடிகிறது. அதுவே பகிர்தலின் அடிப்படை.
பதினைந்து நிமிடங்களுக்குள் சம்பிரதாய வரவேற்பு மற்றும் நிகழ்வுக்கான நியாயம் செய்தல் என நேர வரையறை சற்றுப் பின்னடைவு என்றே சொல்வேன். சமயத்தில் அந்த நேரத்திலிருந்தும் குறைத்து வழங்கிப் பேச்சாளர்களின் குறிப்புப் பக்கங்களைக் காற்றில் படபடக்க வைப்பதுண்டு. நிகழ்வு ஒருங்கிணைப்புகளில் நானே அவ்வாறு செய்திருக்கிறேன். அந்த முறைமைகளின் இறுக்கத்தினை இந்த உரையாடல் வடிவம் இல்லாமலாக்கியிருக்கின்றது. வேறு சில சமூக ஊடகக் கூட்டுப் பகிர்வுச் செயலிகளில் இல்லாத அளவு குரல் தெளிவு இருப்பதைக் குறிப்பிட வேண்டும்.
ஷாலினியின் இயல்பான இலக்கிய ஆளுமையும் அவரின் ரசனைப் பாங்கும் வெளிப்படுகிறது. நாடோடிச் சித்திரங்கள் என்ற அவரின் பயணக் கட்டுரைத் தொகுப்பையும் தாகூரையும் குறிப்பிட்டுப் பேசியது நிறைவளிக்கிறது. பயணக் கட்டுரை வெளியில் அவருக்கான இடம் நிச்சயம் உண்டு.
“வண்ணத்துப்பூச்சி தன் வாழ்வினைத் தருணங்களால் தான் எண்ணுகிறது நாட்களால் எண்ணுவதில்லை” என்ற இரவீந்தரரின் வரிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. எவ்வளவு அற்புதமான பார்வை இது. இயற்கையும், சின்னஞ்சிறிய உயிர்களும் மனிதர்க்குக் கொடுக்கும் கொடையல்லவா இத்தகையவை. இதனையே அக ஒளி எங்கிறார்கள். சமயத்தில் நாமதனைக் கேலி செய்து கொள்ளலாம். ஆனால் இறுதிப் பயணமானது ஒவ்வொளியை நோக்கியே செல்கின்றது. அத்தகைய தருணங்களால் ஆனதுதான் மனித வாழ்வும். என்ன நாமதனை அவ்வப்போது மறந்து விடுகிறோம். நீண்ட நாட்கள் மறந்திட்ட ஒன்றை நினைவூட்டுவனவும் இலக்கியமாகும். தருணங்களைக் கைக்கொள்ளவும் வாய்ப்பிருந்தால் மகிழவும் இன்னும் மனமிருந்தால் கொண்டாடவும் வேண்டுமென்கிற ஒரு சிறிய நினைவுச் சுடரை நம்முள் ஏற்றி வைக்கின்ற வரிகள் இவை.
தாகூரின் எழுத்துக்கள் எவ்வகையிலானவை என்ற கேள்விக்கு “சுய பரிசோதனைக்குப் பிறகான வெளிப்படுத்துதலாக அமைந்தவை” என்ற பதிலைத் தருகிறார் ஷாலினி பிரியதர்ஷினி. மிக ஆழமாக ரவீந்திரரை உள்வாங்கியிருந்தால் தவிர இப்படியான மறுமொழியைத் தந்திருக்க இயலாது. சுய பரிசோதனை என்பது ஒரு நிலையாகவும் வெளிப்படுத்துதல் என்பது இன்னொரு நிலையாகவும் கொண்டிருக்கும் பொது உலகியலிலிருந்து வேறுபட்டதும் தனித்துவமானதுமாகும் தாகூர் படைத்திட்ட இலக்கியம். எளியோரும் அறிந்திடும் படிமங்கள் அவரின் எழுத்துக்கள் கொண்டாடப்படுவதற்கான காரணிகளில் முதன்மையானதாகும்.
ஒளி முருகவேல் அவர்கள் இவ்வளவு பேசுவார் என்பது எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது. கிறுக்கல்கள், பக்கங்கள், குறிப்புகள், புலம்பல்கள் என்பதில் என்னளவில் விருப்பமில்லை என்றாலும் கூட அவ்வாறானவைகளில் ஒரு சில தன்னடக்கத்திற்காக அப்படிச் சொல்லிக்கண்டாலும் தரமானவையாக அமைவதுண்டு. இது அந்த வகைதான்.
முன்னர் அவர் ஒரு பயணக் குறிப்பினைப் பகிர்ந்திருந்தார். ஒரு நாடோடிச் சாமியார் பற்றிய மிக நன்றாக எழுதப்பட்ட அனுபவம் அது. புகைப்படங்கள், ஒளிப்பதிவு, அட்டைப்பட வடிவாக்கம், எழுத்து, பதிப்பக ஒருங்கிணைப்பென அவர்தம் பன்முக ஆற்றலில் இந்தச் செம்புலம்பலும் ஒரு ஆரோக்கியமான சேர்மானம் தான். படைப்பூக்கமும் பெரு விருப்பமும் கொண்டோருக்கு இது சாத்தியம். இந்தக் குறிப்பிட்ட உரையாடலுக்கு அவர் வைத்திருந்த கேள்விகளே அதற்கு சாட்சியம். மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்ட, பகிர்வுகளுக்கான வெளியமைந்த இயல்பான கேள்விகள் அவை.
இலக்கிய உரையாடல்களுக்கு மிகச் சற்றே பொழுதுபோக்குத் தன்மை மேலிட வைத்து எளிமைத் தன்மையுடன் கடத்துவது இந்த ஸ்பாட்டிபை உரையாடல் பக்கங்களின் சிறப்புத்தன்மையாக அமையக்கூடும். பயண நேரங்களில் உடன் உரையாடி வருவது போன்று பயனுள்ளதாக அமையும். என் வாழ்த்துக்கள்.
இரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளில் சிறந்ததொரு அர்ப்பணம்.
♠ இணைப்பு : https://open.spotify.com/episode/7jcX2fLc05LPKYwop73NHH