ஜப்பானிய ஹைக்கூ தமிழில் : கவின்
●
ஒரு மெழுகுவர்த்தியின் ஒளி
இன்னொரு மெழுகுவர்த்திக்கு மாற்றப்படுகிறது
வசந்தகால மாலை
–
அழகான கிண்ணத்தில்
இந்த மலர்களை அடுக்கி வைப்போம்
அரிசி இல்லை என்பதால்
–
குதிரைகளில் பதினோரு ஆண்கள்
நிதானமாக முன்னேறுகின்றனர்
காற்று மற்றும் பனிப்புயலினூடாக
–
பலத்த சத்தத்துடன் மழை
ஆலங்கட்டிகள் விழுகின்றன
என் புன்னைமரப் பயணத் தொப்பியின் மீது
–
குளிர்காலம் துவங்குவதற்கு முன்
குழந்தைக்குச் சொல்லித் தருகிறேன்
உணவுக்குச்சிகளைக் கையாள
–
நாம் ஒன்றாகப் பார்த்த பனி
பெய்யுமா
இந்த வருடமும்?
–
இன்றிலிருந்து நாங்கள்
இந்த வார்த்தைகளை அழித்துவிடுவோம்
பயணியின் தொப்பியில் பனித்துளி
–
இந்த வழியில் என்னைத்தவிர
யாரும் பயணிக்கவில்லை
இந்த இலையுதிர் மாலை
–
அவ்வப்போது மேகங்கள் வந்து
மனிதனுக்குச் சற்று ஓய்வளிக்கின்றன
நிலவைப் பார்ப்பதிலிருந்து
–
காகம்
ஏதுமற்ற கிளையில் அமர்ந்திருக்கிறது
இலையுதிர்கால மாலை
–
உலகின் அழுக்கை
எப்படிக் கழுவுவேன்
இந்த பனித்துளிகளைக் கொண்டு
–
ப்ளம் மலர்கள் பூத்திருக்கின்றன
நிலவு சொல்கிறது
“நான் இதைத் திருடிக்கொள்ளலாமா?”
–
பனிப் புகையினூடே
நான் பார்க்கிறேன்
ஒரு நீர்ச்சக்கரத்தை
–
அறுவடைக்கால நிலா
குளத்தைச் சுற்றிச்சுற்றி அலைகிறேன்
இரவு போய்விட்டது.
–
குவிந்த பனியின் கீழ்
ஒரு மலைக் கிராமம்
தண்ணீரின் சத்தம்
………………………………………………………….
●