சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்தமுடிவும் தம்முட் கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர
முத்தர் தம் முத்திமுதல் முப்பத்தாறே. (திருமந்திரம்.125)
சித்தர்கள் சிவலோகத்தில் பெறவேண்டியதை இப்பூவலகிலேயே தரிசிப்பார்கள். சத்தத்தையும் அதன் முடிவையும் தம்முள்ளேயே கொண்டவர்கள். குண்டலினி சக்தியை அசைத்தெழுப்பும் நாதமே சத்தமாகும். அதன் இறுதி நிலையான அசைவின்மை (சமாதி நிலை) சத்தத்தின் முடிவு. அம்முடிவில் ஒரு துவக்கம் உண்டு. பேரானந்தப் பாதையின் நித்தியத்துவத் துவக்கம் அது. மெய்யனுபங்களில் அறிவினைப் பயன்படுத்தாது “வெறுமனே” “சும்மாயிருத்தல்” என்பது ஆன்மிகப் பயிற்சியில் சாகசத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த நிலையாகும். அறிவைப் பயன்படுத்தாத நிலையை நிமலர் என்றும் உறக்கத்தையொத்த ஆனால் முக்காலம் குறித்த விழிப்புணர்வோடு சொல்லற்ற நிலையில் அசைவற்று இருப்பதைச் சோம்பர் என்று திருமூலர் குறிப்பிடுகிறார். குற்றமில்லாதவராய்த் தூய இன்பத்தில் ஆழ்ந்திருப்பவர் மெய்ம்மையின் அருகில் தன்னை உணரும் வாய்ப்பு மிகும். அந்நிலையை நிராமயர் என்பர். முக்திக்கு வழியாகவும் உயிர்நிலை கருவியாகவும் முப்பத்தியாறு தத்துவங்களைத் திருமந்திரம் தருகிறது. அதில் ஆன்ம வழியிலான தத்துவங்கள் 24. கற்றுணர்ந்து மேல்வழிச் செல்வதற்கான வித்தியா தத்துவங்கள் 7. முக்திக்கு முதலான சிவ தத்துவங்கள் 5. சம்சார பந்தத்தில் ஆழ்ந்து வீடுபேறடைபவர் இந்த ஐந்தில் அடங்குவர்.
முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத்து உள்ளொளி புக்கு
செப்ப அரிய சிவம்கண்டு தான் தெளிந்து
அப்பரி சாக அமர்ந்திருந்தாரே. (திருமந்திரம்.126)
பல படிநிலைகளை உடைய முக்தியை அடைய அம்முப்பத்தியாறு தத்துவங்களை ஏணியாய்ப் பயன்படுத்தி ஒப்பற்ற சிவானந்தத்தில் கலந்து, கரைந்து, உருகிப் புகுவர். சொல்லால் எளிதில் எடுத்துணர்த்திடவியலாத அரிய பெருமையுடைய சிவத்தினைக் காண்பர். முதலில் ‘தான்தெளிந்து’, ‘மெய்யுணர்ந்து’ ‘சிவத்தில் ஆழ்ந்து’ அமர்ந்திருப்பர். அவ்வகைச் சித்துநிலை எய்துபவர் சிவமாகவே உருக்கொள்வர். சிவத்தன்மையின் ரூபமாய் வெளிப்படுவர். சிவமாய் உணரப்படுபவர். எங்கும் தம்மை உணரும் சிவமாய், சிவனின் திருவிளையாடல்களைப் பருப்பொருளாயும் நுண்பொருளாயும் உணர்ந்து தரிசித்தபடி இருப்பர். நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தின் மெய்ம்மைத்தன்மையை உணர்வதும் உணரவிழைவதுமான உயிராற்றல் நிலைகொண்டு இருப்பர். தாம் என்கிற அகங்காரம் இழந்து சுயம் மரணித்து அந்த ஞான நிலையின் காரணமாக எய்திய நிலையான சோம்புதலில் இருப்பர்.
இருந்தார் சிவமாகி எங்கும் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்து அங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே. (திருமந்திரம்.126)
சோம்புதல் என்பது அப்பழுக்கில்லாத பரிசுத்தமான வெளியாகும். தன்செயல், தற்செயல், பிறர்செயல் அற்று முற்றும் முழுவதுமாகச் சிவச்செயலாக இருப்பவர் சோம்பர். அது இருத்தல். அது கிடத்தல். விருப்பு வெறுப்பற்றுச் சுயமற்றுக் கிடக்கும் சுத்த வெளி. எண்ணமானது இயங்கும் அனைத்தும் வெளியே. சுருதியாகிய கானம் அதாவது அசைவாகிய சத்தம்முடிவுறும் இடத்தில் சிவத்தை உணரும் நிலை துவங்கும். சோம்பல் அது ஆன்மப் பயணம். தூக்கத்தினை ஒத்திருப்பது போலத்தோன்றும். விழிப்புநிலை மற்றும் காரண காரிய அறிவு மங்கிய தூக்க நிலை இரண்டையும் ஒத்திருக்கும் அச்சோம்பர் நிலை.
தூங்கிக்கண் டார்சிவ லோகமுந் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமுந் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமுந் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. (திருமந்திரம்.129)
அத்தூக்கத்தினால் சித்தர்கள் சிவலோகத்தினையே தம்முள் கண்டனர். மனம் உடல் ஆகியவற்றின் ஒன்றாதல் தத்துவமான யோகத்தைத் தம்முள் கண்டார். சிவபோக முக்தியின் பேரின்பத்தைத் தம்முள்ளே கண்டார். அந்நிலையைச் சொற்களால் உணர்த்திடவியலாது. அனுபத்தில் இல்லாதவரால் அதனை உணர்ந்து கூறவியலாது. அறிவுக்கு எல்லையை எவ்வாறு காணவியலாதோ அவ்வாறே அருள் செய்யும் இறைவனின் துவக்கத்தை அதன் மூலாதாரத்தை முற்றிலும் அறிந்துகொள்ள இயலாது.
சும்மாயிருத்தல் என்பது சொல்லற இருத்தல். எண்ணங்களற்று இருத்தல். ஆயின் அது மரணித்தலல்ல, இருத்தல் தான். இருத்தலியல்தான். சொல் மனம் இரண்டும் செயல்படாமல் இருத்தல் மோன நிலையாகும் (திருமந்திரம்.1896). அனைத்தையும் உள்வாங்கி எல்லாவற்றையும் பிரதிபலித்து, தனித்துவத்துடன், நிச்சலனமாயிருக்கும் குளத்தினைப் போல மனம் அமைதல் வேண்டும். தவத்தினால் அது கைகூடும். மெய்த்தேடும் இறை நோக்கத்தில் அமைந்த பயிற்சியென்னும் பயணமே தவம். ஓர் ஆதாரத்தில் விளங்குவது சதாசிவமாயினும் கூட (திருமந்திரம்.1895) எப்போதும் விடுபடாமல் சிவத்தின் நினைவில் இருப்பது, மனதின் அடியாழத்தில் இறைமையின் மீதான பெருவிழைவோடு இருப்பது என்னும் நிலைகளைச் சதாசிவம் எனலாம். பேசா அமைதி, பேச்சற்ற சிவ பாவனை என சிவத்தை விளக்குகிறார் திருமூலர் (திருமந்திரம்.1611).
சும்மா உட்கார்ந்திருக்கிறது
அமைதியாய் புல்
தானாய் வளர்கிறது
வசந்தம் வரும்போது
என்கிறது ஜப்பானியக் கவிதை. வெறுமனே இருக்கும் புல் வசந்தம் வருகையில் தானாக வளர்கிறது. வாழ்வில் வலுக்கட்டாயமாக எதனையும் செய்யத் தேவையில்லை. அனைத்தும் மாறும். அனைத்தும் தம் இயல்பின் சுழற்சிக்குள் வந்தே தீரும். நன்மையும் தீமையும் நிரந்தரத்தன்மையற்றவை. மனிதர்கள் தங்கள் அசல் தன்மைக்குத் திரும்புவதைக் குறிப்பிடுகிறது ஒரு ஜப்பானியக் கவிதை,
புல்லாங்குழலின் ஓசை
திரும்பிவிட்டது
மூங்கில் காட்டுக்கு
சிவத்தை உணரும் பல்வேறு படி நிலைகளில் முழு விழிப்புணர்வோடு கூடிய சும்மாயிருத்தலும் மனதின் அசல் இயல்புகளில் நீடித்திருத்தலும் இயற்கைக்கு உட்பட்ட அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்ட சுழற்சியை மேற்கொள்ளும் என்ற தன்மையின் புரிதலும் மேற்கண்ட பாடல்களின் மூலம் அடைகின்றோம். சித்தர்கள் குறிப்பிடும் மனிதர்களின் ஆதாரச் சக்கரங்களில் ஒன்றில் தொடர்ந்து நிலைத்திருப்பது சதாசிவம் எனும் நிலை. எனில் சதாசிவமே ஒரு படிநிலையெனில் அதுவும் பெயர் குறிப்பிடாத ஒரு ஆதாரத்தில், சிவத்தின் தன்மை எல்லையற்றது என்பது விளங்குகிறது. அது எந்த ஆதாரம் என்று குறிப்பிடப்படாமல் இருப்பதன் பின்னுள்ள ஆன்மிக உண்மைகளும் நம்மைக் கிளர்த்துகின்றன. ஒவ்வொரு ஆதாரங்களும் முறையே ஒவ்வொரு உடல் உறுப்பு மற்றும் தனித்த உணர்வுகள் ஆகியவற்றோடு தொடர்புடையவையாக இருக்கின்றன எனும்போது எவ்வுறுப்பையும் அல்லது எவ்வுணர்வையும் நிலைக்கச் செய்து இயற்கையின் சுழற்சி மாற்றத்துக்கு எதிராக்காமலும், தனிநிலை சார்ந்த ஆன்மிகச் சாகசப் பயிற்சிக்கு விட்டுவிடும் முறைமையாலும் ஒரு பரந்தவெளியை நமக்கு விட்டுவைக்கின்றார் திருமூலர். அது கடவுள் தன்மையை, சிவத்தைப் பின் தொடர்பவர்களுக்கான பாக்கியமாகும். சதா சர்வ காலமும் சிவம் பற்றிய விழிப்புணர்வோடு சும்மாயிருத்தலே சும்மாயிரு சதாசிவம்.
உள்ளார்ந்த இயற்கையான விஷயம் ஒன்று உண்டு
வானக வையகத்துக்கு முன்பாக இருந்தது அது
சலனம் அற்றதாக ஆழம் காணமுடியாததாக
அந்த ஒன்று தனித்துநின்று
ஒருபோதும் மாறாமல் இருக்கிறது
அந்த ஒன்று எங்கும் வியாபித்து
ஒருபோதும் தீர்ந்துபோகாமல் இருக்கிறது
அந்த ஒன்றைப் பிரபஞ்சத்தின் அன்னை எனலாம்
அந்த ஒன்றின் பெயர் எனக்குத் தெரியாது
என்று தாவோயிசத்தை விளக்கி லாவோட்சு கூறுகிறார். அவர் பெயர் அறியவில்லை என்று கூறியது சிவத்தையே என்று நாம் கொள்வோம். இருத்தல் உயிர்ப்பென்பர். சும்மாயிருத்தல் சொர்க்கமென்பர். சும்மாயிருத்தலே சிவமென்பர்.