1.
ராத்தடம் முழுக்க
உதட்டின் ரேகைகள்
அதில் செழுங்கவிதைகளின்
இசைக்குறிப்புகள்
அரூப வாசனைச் சுவர்
முழுவதும்
அவளின் உதடுசுழிப்புகள்.
2.
ரா
எனை மீட்டுகிறது
‘என்னடா சும்மா
வானத்தப் பார்த்துட்டு உட்கார்ந்திருக்க?’
என்ற கேள்விக்கான விடையை
நட்சத்திரத்தைக் கேட்டுச் சொல்ல
முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.
3.
மேற்கண்ட
ரா
கவிதையைப் படித்துவிட்டு
நீங்கள் நினைத்தது சரிதான்
நான் ஒரு பைத்தியம் தான்
கொஞ்சம் இதமாய்ச் சொன்னால்
பிறழ்வன்.
4.
எந்த நள்ளிரவிலும் வரக்கூடும்
ஒரு டிங்
அதற்காகவும் உறங்காமலிருக்கிறேன்
இதுவரை வந்த டிங்-களைச் சேகரித்து
எனக்கு நானே ஒரு
சிம்ஃபனி தயாரித்துக்கொள்கிறேன்.
5.
ராத்தடத்தின் ஒளிர் பூக்கள்
அவ்விரவைத் தேவ ரகசியமாக்கும்
நான் மிளிர
அவை மெல்லத் தலையசைக்கும்
கிறிஸ்துமஸ் மாதத்தில் பிறந்தவன் போல
நட்சத்திரங்களோடும் சாண்டாவின் பரிசுகளோடும்
நான் உலாத்துகிறேன் மின்மினிகளின் துணையுடன்.
6.
இரவுக்கு வெள்ளையடிக்க நினைத்தேன்
பழைய டைரிகளை எடுத்து வைத்து
படிக்க உட்கார்ந்துகொண்டேன்.
7.
எக்காரணமுமின்றி நினைவு வரும்
ஓர் முகம் என்னைக் கொஞ்சம் அசைக்கிறது
அந்த அரவணைப்பும் உரிமையான சொற்களும்
மீள் என்று முகநூல்சொன்னாலும்
மீளவே முடியாத
நினைவுத் தடம்.