தனது இறுதிக்காலத்தில் நடுங்கிக்கொண்டே எழுதிய மகத்தான எழுத்தாளர் ஒருவரின் கரம்பிடித்துப் பார்த்தேன் இன்று. எழுத்தை அதிதீவிரமாக நம்பியிருந்தவன் ஒருவனின் ஆன்மாவைத் தரிசிக்க நேர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். காலத்தைப் பின்னோக்கி நகர்த்தி எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் செம்பிரதி “நான் புதுமைப்பித்தன்” நாடகம். எஸ்.ராமகிருஷ்ணன் கதை வசனத்தில் கருணா பிரசாத் இயக்கத்தில் நான் புதுமைப்பித்தன் நாடகம் கூத்துப்பட்டறை முத்துசாமி அரங்கில் நடைபெற்றது.
அவரின் அந்த உறுதி வெளிப்பட்ட விதம், இயலாமை இருப்பினும் சமரசங்களுக்கு ஆட்படாமல் தனக்கான சரியான நேரத்திற்காகக் காத்திருந்த தவம். பொருளாதாரத் தேவைக்காக சென்னை வந்து தங்கியது முதல் காசநோயால் பாதிக்கப்பட்டுப் பின் மீள முடியாமல் இறந்தது வரை இந்த நாடகம் ஒரு நல்ல முயற்சி. வெற்றிகரம் என்பதை விட ஆழமானது என்று சொல்லலாம். மன உறுதியும், சமரசமற்ற தன்மையும், ஆழ்ந்திருந்த கலகக் குரலும், வணிக எழுத்துக்கெதிரான சிந்தனைகளும் புதுமைப்பித்தனை மனதுக்கு மேலும் நெருக்கமானவராகச் செய்தது.
பொருளாதாரச் சிரமங்களுக்கு உட்பட்ட ஒரு நாடக வெளியில் புதுமைப்பித்தனின் வாழ்வு, எழுத்தின் களங்கள், பேச்சு முறை ஆகியவற்றைக் கொண்டுவந்திருப்பது உள்ளபடியே பாராட்டத்தக்கது. நாடகம் கோர்க்கப்பட்ட, உருவாக்கப்பட்ட விதம் மிக அருமையானது. மிக முக்கியமாய் புதுமைப்பித்தனின் கடித வரிகளை அவரின் குரலிலேயே கமலாவின் உதடுகள் மூலம் படிக்க வைத்த உத்திமுறை ஓர் உணர்விலக்கியம். புதுமைப்பித்தனின் கதைமாந்தர்களையே நாடகக் கதாபாத்திரங்களாக்கியிருப்பது சமர்ப்பண உணர்வின் உச்சம் எனலாம். ஒரு கதைக்காரராக புதுமைப்பித்தனைத் தன் உயிரில் உள்வாங்கி இருந்தால்தான் இது சாத்தியம்.
கருணாபிரசாத்தின் இயக்கம் தனித்துவமானது. ஒவ்வொரு கதைமாந்தர்களின் படைப்பும் மகிழ்வு மற்றும் செயலூக்கத்தின் சாயலுடன் அற்புதமாக இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொருவரின் சிரிப்பு வெளிப்பாடும் படைப்பூக்கத்தின் அதிநிலை எனலாம். புதுமைப்பித்தனின் இலக்கியச் சுவை குன்றாமல் அவரைப் பற்றிய ஆவணமாக அமைந்துள்ளது இந்த நாடகம்.
எழுத்தாளர்களின் அவல நிலை வாழ்வு குறித்த வசனங்கள் மிகக் கூர்மையானவை. புதுமைப்பித்தனின் பகடிக் குணம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. மருத்துவரோடும் தனது கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதையில் வரும் சிவபிரானோடும் நிகழ்த்தும் உரையாடல் மிக முக்கியமானவை. சினத்துடன் கேள்விகள் கேட்கும் சிவனிடம் குழந்தையிடம் தோற்கும் இடம் பற்றிப் பேசி வாயடைக்க வைக்கும் காட்சி ஒரு மின்னல் கணம். பொன்னகரத்தின் இறுதி வரிகளைச் சேர்த்திருப்பது இனிய அனுபவமாக இருந்தது. புதுமைப்பித்தனின் கதைகளில் வெளிப்படும் கூர்மையான புத்திசாலித்தனம் அவரைப் பற்றி இயக்கிய நாடகத்தின் வசனங்ககளிலும் வெளிப்பட்டிருப்பது ஒரு அபூர்வம் என்றே சொல்லலாம். அதனை நிகழ்த்திய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் படைப்பாற்றல் போற்றத்தக்கது.
“இந்த நாடகத்தினைத் தமிழ்நாடு முழுவதும் மேடையேற்ற வேண்டும். குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டுசேர்க்க அதிக முயற்சி எடுக்க வேண்டும். அனைவரும் பார்க்கும்வண்ணம் நகரின் நடுவில் நடத்தவேண்டும்” என்ற கோரிக்கையை வைத்தார் புதுமைப்பித்தனின் உறவினர் ஒருவர். நாமும் அக்கோரலை வழிமொழிகிறோம். மிக அவசியமான முன்னெடுப்பாக அது அமையும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அரங்கேற்றப்படவேண்டிய நாடகப் பிரதி இது.
புதுமைப்பித்தன் இறந்தபொழுது இரண்டு வயதுக் குழந்தையாக இருந்த அவரது மகள் தினகரி நாடகத்திற்கு வந்திருந்தார். புதுமைப்பித்தனின் மகள் என்றதும் மனம் சிலபொழுதுகள் நிலைகுலைந்தது உண்மைதான். கையறு நிலையின் கூறு உண்டு அதற்கு. பின்னர் அவர் பேசப்பேச மனம் பரவசம் கொண்டது. அந்தத் தெளிவான பேச்சு புதுமைப்பித்தனிடம் என்னை அழைத்துச் செல்வதாக உணர்ந்தேன். “நான் அப்பாவைப் பார்த்துவிட்டேன். உங்களுக்குச் சொல்ல என்னிடம் இருப்பது ஒன்றுதான் அது என் கண்ணீர்.” என்றார். மேலும் அவர் தன் அம்மாவைப் பற்றிச் சொன்னது தீர்க்கமானது. “நீ சென்னை செல்ல வேண்டும், உன் வாழ்வின் அனுபவங்களை நீ எழுத வேண்டும்” என்று அப்பா தன் அம்மாவுக்குக் கொடுத்த ஊக்கத்தினைச் சொன்னதோடு அம்மா அதனைச் செயல்படுத்திக் காட்டியதையும் குறிப்பிட்டார். அதிகம் பேசப்படாத எழுத்தாளர் கமலா அவர்களைப் பற்றிய சித்திரமாக அது அமைந்திருந்தது. சென்னையில் அப்பா வாழ்ந்த இடத்தில் இந்நாடகத்தினை அரங்கேற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தினை வெளிப்படுத்தினார். அது மிகவும் உள்ளுணர்வுப்பூர்வமாக இருந்தது.
பேராசிரியர் அ. மங்கை கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் கதையில் வரும் “இரண்டு கப்கள் காபி என்று சொல்லவேண்டும்” என்ற வரிகளைச் சுட்டிப் பேசியதும் பேராசிரியர் வீ.அரசு அவர்கள் “நாடகம் முடிவடைந்துவிடுவதில்லை, அது தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்” என்று கூறியதும் நினைவில் என்றுமிருக்கும் நயமிக்க கூற்றுகள். புதுமைப்பித்தனின் சிறுகதைகளை மக்கள் பதிப்பாகக் கொண்டுசேர்த்த சீர் பதிப்பகத்தினர் நிகழ்வுக்கு வந்திருந்தது பெரும் மன நிறைவை அளித்தது. மரணம் குறித்த புதுமைப்பித்தனின் வரிகளோடு ‘ஓடாதீர்’ என்ற ரமேஷ் பாரதியின் கவிதைப் பாடலும் நிறைவளித்தது.
திரைக்கலைஞர் ஜெயக்குமார் பேசும்பொழுது “ப்ரசாத்திடமிருந்து இப்படி ஒரு படைப்பை உண்மையில் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அவருக்கு வாழ்த்துகள்.” என்றார். ஆனால் நான் எதிர்பார்த்திருந்தேன். கருணாபிரசாத் அவர்கள் தனது முனைவர் பட்டத்தினை நிறைவுசெய்து கல்விப்புலத்திலும் நாடகம் மற்றும் திரைக்கலையின் கூற்றுகளை வெளிப்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை. மதிப்பிற்குரிய முத்துசாமி அவர்களின் நூல்களை அவர் தனது போதிவனம் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எழட்டும் ஓர் புதிய அலை.
இந்த நாடகம் ஒரு அற்புதமான ஒரு கலை அனுபவம். புதுமைப்பித்தன் பற்றி நுணுக்கமான நிறைய செய்திகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அவரை சொ.வி (சொ.விருத்தாசலம்) என்று நண்பர்கள் அழைப்பது, சென்னையின் அவரது அறையில் அவரே நண்பர்களுக்கு கடுங்காப்பி தயாரித்துக் கொடுப்பது, எம்.கே.டி பாகவதர் திரைப்பட்டத்தினை நம்பியிருந்தது, அது நோய்மை காரணமாகக் கைகூடாமலானது என்று பல இருக்கின்றன. எழுத்தாளனின் வாழ்வுமுறை அதுவும் எழுத்தில் காலத்தால் வெற்றிபெற்று ஆனால் வாழ்ந்த காலத்தில் தோல்விமுகச் சாயல்கொண்ட வாழ்வினைக் கொண்ட புதுமைப்பித்தனை உள்ளும் புறமும் அறிந்துகொள்வதில் இருக்கும் அனுபவச் சாகரப் பகிர்வு முக்கியமானது. அது கற்றலும் அறிதலுமாகும்.
புதுமைப்பித்தனின் வாழ்வில் இருந்து ஒருசில தருணங்களை மட்டும் கோர்த்திருந்தாலும் அது தன்னளவில் ஒரு முழுமையை எட்டி இருந்தது என்று உறுதிபடக் கூறமுடியும். புதுமைப்பித்தனை இயக்கியது எது? என்ற கேள்வி அனைத்துக் காட்சிகளிலும் ஊடுபாவாகத் தொனித்தது எனக்கு. வாங்கிய சொற்ப ஊதியத்தில் பெரும்பங்கு புதிய புத்தகங்களை வாங்கி வந்து நிற்கும் அவரது தேவை என்னவாக இருந்து அந்த உன்மத்தத்தின் மதிப்பு என்ன என்று இன்றைய சூழலில் எண்ணிப் பார்க்கின்றபொழுது மனம் திடுக்கிடுகிறது. வாழ்வின் மீது எவ்வளவு அவநம்பிக்கைகள் கொண்டிருந்தாலும் கூட இந்த நாடகப் பிரதியைப் பார்ப்பவரால் ஒருவித திட உணர்வுக்கு வராமல் இருக்க முடியாது. சக எழுத்தாளர்களுக்கோ இப்படைப்பு கலைவெளியில் ஒரு பெரும் ஊக்கியாக அமைந்திருக்கின்றது.