கவின் (26.01.1983)
ஐந்தாம் வகுப்பிலிருந்து கவிதை வடிவத்தின் மீது ஈர்ப்புக் கொண்டு எழுதி வருகிறேன். அப்போதிருந்தே ஹைக்கூவின் மீது ஆர்வம் உண்டு. எழுத்தாளர் சங்கம் நடத்திய கவிதைப் பயிற்சி முகாமில் 1996 –இல் பங்கேற்றேன். அங்கு கவிஞர் கந்தர்வன் அவர்களும் பேராசிரியர் முத்துநிலவன் அவர்களும் எனது ஆர்வம் கண்டு பெரிதும் ஊக்குவித்தனர். “ஏழையும் பார்த்தான் / வைர மோதிரம் / சூரிய கிரகணம்” என்ற எனது கவிதையை பயிலரங்கத்தின் முதல் கவிதையாகத் தேர்வு செய்து “அகத்திய பாரதி” என்ற அன்புமொழியைப் பரிசளித்தனர். அக்கவிதை செம்மலர் இதழிலும் வெளியானது. முன்னரே தோழர் ராஜாமணி மற்றும் தி. குழந்தைவேலு அளித்திருந்த கவிதை குறித்த பயிற்சிகளும் அறிமுகங்களும் என்னளவில் முக்கியமானவை.
அப்போதிருந்து வாழ்வியல் மீதும் அதில் தோய்ந்து வெளிப்படும் கவிதைகளின் மீதும் இடையறாது கவனம் செலுத்தி வருகிறேன். ஒரு நிகழ்வு அல்லது உணர்வின் கவித்துவத்தினை அது நிகழ்கிறபொழுதே மனம் உய்த்து உணர்ந்துவிடும். எழுத்து வடிவில் அவற்றை வடிப்பது என்பது எனக்கு இரண்டாம் நிலைதான். பெரும்பாலான நேரங்களில் நான் அவற்றைப் பதிவு செய்வதே இல்லை. எழுதலாம் என்று அரிதான உந்துதல் எழும்போதுதான் எழுதுகிறேன். அவற்றையும் ஒருமுறை மட்டுமே செப்பனிடுவேன். பல நூறு முறை திருத்தி எழுதும் வழக்கம் இல்லை. கவித்துவ நிலைக்கு நகர்வதே முக்கியம் என்றும் அசல் தன்மை வழுவிவிடும் என்பதாலும் நான் அவற்றைத் திருத்துவதில்லை.
ஒருங்கிணைக்கப்பட்ட ஜென் வாழ்வியல் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. கலை மற்றும் பொதுவுடைமை இரண்டுக்குமான வெளியைக் கொண்டிருப்பது ஈர்ப்பின் காரணமாக இருக்கக் கூடும்.
கல்லூரிக் காலத்தில் “மழை” என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து கொண்டு வந்தோம். பிறகு பாஷோ , சரக்கொன்றை, 6 ஆகிய ஹைக்கூ சிற்றிதழ்களை ஆசிரியராக இருந்து கொண்டு வந்தேன். பட்டாம்பூச்சியின் நிழல், ஒரு டீ சொல்லுங்கள், ஒரு டீ சொல்லுங்கள் மூன்றாம் குவளை, யக்கர் உடுக்குறி, அரூபா, கீறல் பிரதிகளின் தனிமை, தேசாந்திரியின் தேநீர், அந்தரத்தில் சுழலும் மலர் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
உறுமீன் திரைப்படத்தில் “சிறு நடை தூரம்” மற்றும் “ஹே உமையாள்” பாடல்களை இயற்றியுள்ளேன். பல்வேறு குறும்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளேன்.
அரசு உதவிபெறும் கல்லூரி ஒன்றில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.