.
பெருங்கடலைக் கிள்ளிப் பார்க்கும்சிறுபிள்ளைச் செயலென நீள்கிறது சிலவரிகள்.
ஒளிரும் இரவு ஒளிரும் இரவென்று
கவிதைகளும் ஜீவிகளும் சொன்னபோது
எனக்கது புரியவில்லை
வெற்று வார்த்தைகளே உட்சென்று வந்திருந்தன.இரவில் விழித்திருப்பவர்களையும்
அதனைக் கொண்டாடுபவர்களையும்
போதையாளர்கள் என்று கூட எண்ணியதுண்டு.
இன்றிரவு எனக்கது
நிகழத்துவங்குகிறபோதுதான்
இவ்வளவு அழகானதா
இவ்வாழ்வெனத் தோன்றியது.
உணர்வு அறிவு ஞானம் எண்ணம் நான்
என் விரல்கள் நகத்தின் நுனி என
எல்லாமும் ஒளிர்ந்த கணங்கள் அவை.
மெல்ல வியாபிக்கும்
அதன் சுகந்தம் உணரத்தலைப்பட்டேன்.
என்ன ஏகாந்தம் என்ன இனிமை என்ன ஒளி
என்ன மிளிர்வு என்ன சாகசம் என்ன கரைதல்
தாவோவின் நெகிழ்வுத்தன்மையிலும்
ஒஷோவின் விளையாட்டுத்தனங்களிலும்
லயித்துச் சுகித்து ஓடித்திரிந்தேன்.வலிகள் ரணங்கள்
சிலது ஓவியமாகவும்
பலது கரைந்தும் காணப்பட்டன.
அதைத் தந்தவர்கள் குறித்து யோசிக்க முனைந்ததும்
சிறு காற்றசைவில் கரைந்திடும் முகங்கள்
அவர்களதுடையது மாதிரியே இருந்ததும் மாயவரம்தான்.
தவிர அவர்களெங்கே கொடுத்தார்கள்
பெற்றுகொண்டது நானல்லவா..ஆரஞ்சு மிட்டாயின்
சாறுவழிந்திடும் உதடுகளோடு ஒருத்தி
பாஸோவின் தவளையாய்
துள்ளிக்குதித்து ஓடுகிறாள்
நானோ துரத்தாமல் ரசித்துக்கொண்டிருக்கிறேன்.
தவளை திரும்ப இக்குளத்திற்குவந்து
மிக வழக்கமாய் விழும்
என்றெனக்கு நன்கு தெரிந்திருக்கிறது.
எப்படித்தெரிந்தது என்றொரு
கேள்வியைக் கேட்டுப் பார்த்துக் கொண்டேன்
வார்த்தைகளுக்குப் பதிலாய்
சந்தோஷமே வரிசைகளின்றி வந்து விழுகின்றன.
எங்கே போனாலும்
தவளையின் கொண்டாட்டம்
மழையோடுதானே..!படுத்துவதும் பெறுவதும்
பேரன்பென மழைதானே சொல்லிக் கொடுத்தது..?கதை சொல்லும் உத்தியோடு
ஒரு குரல் என்னிடம் ஏதோ சொல்லிப் போகிறது.
கதையில் மிகச்சரியாய் எதுவும் இல்லை
ஆனால் அற்புதமானதாயிருக்கிறது
அணுவணுவாய் ரசிக்க முடிகிறது
அக்குரலை நேசிக்கத்துவங்குகிறேன்
அது வழிந்தோடும் தருணங்களில்
அதுவறியாமலேயே உடன் பயனிக்கிறேன்.
ஒரு நீள் கவிதையொன்று உடன் வருகிறது
நான் எழுதிக்கொண்டிருப்பதுதான்..
உடன் அதனைப் பரிசளிக்கத் தோன்றியது.
மனசுக்குப் பிடித்தவர்களுக்கு
பரிசளிக்கத்தானே கவிதைகள்!
முழுமையான அன்பும்
அன்பின் சக்தியும்
பொங்கி வழியும் பரிசுகள் அலாதியானவை.பனி என் மேனியெங்கும்
மிக மெதுவாய் ஒரு நத்தை போல
நகர்ந்துகொண்டிருக்கிறது.
சுவாசம் மிக நிதானமாய்
ஒரு நடனதிற்கான ஒத்திகை பார்க்கிறது.எது விரகம்… நிலைவைக் காதலிப்பதா…
வைத்துக்கொள்ளட்டுமே
யாருக்கென்ன நஷ்டம்….
தீராத என் காதல் தீராதது
அவனொரு அவன் என்பதைப் போல.அகல் விளக்குகள் எரியும்
கார்த்திகை மாதத் தெருவில் நடப்பதைப் போலிருந்தது
இது என்ன
எனக்கு மட்டும் மாதத்தில் இரண்டாம் பௌர்ணமி
சரி.. படுத்துவதர்க்கும் பெறுவதற்க்குமாய்
இந்த குட்டிப் பையனை மன்னிக்கலாம் தானே …மௌனத்தின் அடர்த்தி…
ஓ என்ன செய்வேன்
கவிதைக்கணங்கள் விண்ணிலிருந்து பறந்து வந்து சேர்கின்றன
கொஞ்சம் கொஞ்சமாய் நானதைப் பருகத்துவங்குகிறேன்
பற்றியிருக்கும் கோப்பை எனக்குப் பிடித்தமான ஒன்று
அதைக் கூடவா காதலிப்பான் ஒருவன்
நான் செய்கிறேன்.மடிக்கணினியில் கொஞ்சம் யுவனைக் கேட்கிறேன்
ஆம் அவனையும் தான் காதலிக்கிறேன்
வலியும் புதுமையும் செவ்வடியும்
உணர்வைச்சுண்டுவது அவனியல்பு.
ஒரு கவிஞனாயிருந்து இசையில்
உருகித்திளைப்பதைத்தான் எப்படிச்சொல்ல..
நிறைய யானைகளும்
நிறையக் குழந்தைகளும் வந்து போனார்கள்
அதன் கண்கள்தான் ”எவ்லவ் பெரிஸ்“.
தீவிரம் ஊற்றெடுக்கும்
உக்கிரப் பெருவெளியில்
சொற்களில் மயங்கிக் கதறும்
ஒரு கிளியானேன்
இரவு முழுக்க
எழுத எழுத வார்தைகள்
ஒளியோடு கரைந்து கரைந்து விளையாடுகிறது
சமநிலையும் நெகிழ்வுத்தன்மையும்
வாய்க்கவென உள்முகமாய்
ஒரு பயணம் போகிறேன்
வராத முழுமையும் வந்துவிட்ட
கொண்டாட்டமும் மகிழ்ச்சியைக் கூட்டுகிறது
இங்கேயே இப்போதே வாழ்ந்துபாரென
உள்தன்மை கிளர்வூட்டுகிறது
துய்க்கத் துய்க்க
அதுவொரு பெரிய சவால்தான்.20+10=0?100=1+1=100என்பது போன்ற அரூபப் படிமங்கள்
ஒரு மாயவித்தைக்காரனின் விரல்கள் போல
விழிகளின் முன் தோன்றி மறைகின்றன.Passion + risk readiness+intutiv judjementஎன்பதை உள்ளங்கைகளில் குறித்துவைத்துக் கொள்கிறேன்.
வன்மையில்லாமல்
தோற்கடிக்க முனையாமல் அதனனைச் சுகிக்கும்
முதல் முறையையும் பின்வரும் முறைகளையும்
பின்குறிப்புகளென நினைவில் கொள்கிறேன்.
உணரத்தலைப்படு- என்றொரு வார்த்தை
அசரீரி போல வந்து விழுகிறது.
ஜென் கண் திறக்கிறது.
ஆழ்ந்து அனுபவித்து சிலாகித்து முத்தமிட்டு
வாஞ்சையாய்க் கைகுலுக்கி
மரணத்தைத் தொட்டுத்தீண்டிப் படர்ந்துணர்ந்து
தனியொரு யோகமெனப் புரியத்துவங்கிய
அதன் பின்னிரவில்
மிகச் சாவகாசமாய்
என் கைகளையும் கால்களையும்
மிகச் சௌகர்யமாய்
அதன் மீது போட்டு
பேரன்புடன் கட்டியணைத்து
தூங்கத் துவங்கினேன்
என் ஒளிரும் இரவை
மழை தவளை ஜென் நானுமென.
