September 17th, 2012

 

 

 

 

 

 

 

 

 

அஞ்சலை

ரெங்கநாயகி
பார்வதி
ஆண்டாள்

லட்சுமி

சுமதி
பேச்சி
என்பவை பெயர்கள்
என்பதையும் தாண்டி
குழந்தைகளின் உலகங்களில்
மாயங்கள் நிகழ்த்தும்
பரவச அதிசயங்கள்.
பெரியவர்கள் என்று
சொல்லப்படுபவர்களால்
ஒருபோதும்
ஊகிக்கவோ உணரவோ
இயலாத
உற்சாக மலையின்
பிரதி பிம்பங்கள்.
மேலும்..
“ஹைய் யான “
என்ற மழலைக் குரலை
நீங்கள் கேட்டிருப்பீர்கள் எனில்
உங்கள் மோட்சத்திற்கான மந்திரம்
உச்சரிக்கப்பட்டே விட்டது.

0
Posted in Uncategorized |
2
December 11th, 2011

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பட்டம் விடும் சிறுவர்களைப் பார்த்ததும்
நினைவு வந்தது
இன்று பௌர்ணமி .
தலை உயர்த்திப் பார்த்தேன்
நிலா பறந்து கொண்டிருந்தது.

 

யாரிடமோ பேசச்சொல்கிறது
இந்த மழை.
யாரிடமென்று யோசிக்காமலேயே
நானும்
சில வார்த்தைகளை யோசித்துவைக்கிறேன்.
கருப்புக்குடையோடு
தேநீர் பருகச் செல்கையில்
தோள்களில் பட்டுத்தெறிக்கும்
மழைத்துளிகள் இன்னும் சில
சுவாரஸ்ய சொற்களைச் சேர்க்கிறது.
குடையில்லாமல் ஓரமாய் ஒதுங்கி நிற்பவர்களைவிட
மழைத்துளிகளின் ஒளிச்சிதரலோடே சாலையில் நடப்பது
இன்னும் ஆனந்தமாயிருக்கிறது.
தேங்கிச் செல்லும் நீரில் கால்வைக்கையில்
கூழாங்கற்களுக்கு ஏங்குகின்றன விரல்கள்.
குறிப்பால் உணர்ந்து தயாரிக்கத்துவங்கும்
மாஸ்டர்கள் இருக்கும்
சென்னையின் தேநீர்கடைகளுக்கென்று
ஒரு கவிதைப் புத்தகம்
சமர்ப்பிக்கலாம் போலிருக்கிறது.

0
Posted in Uncategorized |
3
December 11th, 2011

புகைப்படம் : அறிவழகன்

 

 

 

 

 

 

 

 

 

 

மகானுபவன் 

ஒரு தேர்ந்த கலைஞனின் விரல்கள்
புல்லாங்குழலை நிமிர்த்துவது போல
இன்று நான் படுக்கையிலிருந்து எழுந்தேன்.
கைப்பிடிக்குளிர்காற்று
இமைகளுக்குள்ளும் தலைக்குள்ளும்
மிகமெதுவாய் ஊஞ்சலாடியதை
உணர்ந்தபடி அமர்ந்திருந்தேன்.
மூடியிருந்த விழிகளில்
தீர்க்கமான மென்மையொன்று
அசைந்துகொண்டிருந்தது.
மூளைக்குள் ஏதுமில்லை
உற்று கவனித்தால்
அது ஒரு புன்னகையைத்தரத் தயாராயிருக்கிறது.
சொற்களின் நதி எங்கோ
தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கண்களைத் திறந்து பார்க்கிறேன்
வெளியே
நான் ஊறிச் சுரக்கிரேன்.

 

படவா ராஸ்கல்!

சரியே அடுக்கப்படாமல்
கீழ்விழுகின்றன
சில சொற்கள் .
என்னைப் புரிந்துகொண்ட அவை
மிகத் தயங்கியபடியும்
செல்லமாய் முறுவளித்தபடியும்
கையூன்றி எழுகின்றன.
கோபமும் ரசனையுமுமாய் நான்
உதடு சுழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
சொல்லே..
என் பிரிய நானே…
படவா ராஸ்கல்!

 

பெயர் ஒன்று அறிவேன் பராபரமே..

ததும்பும் மதுக்குவளையின்

வசீகரம் போலிருக்கிறது

ஒரு பெயர்.

அதன் சொல்லின் அடிமுடிச்சில்

திரண்டு திரண்டு

உருவேறிக்கொண்டிருக்கிறது ஒன்று.

அதை நான் அன்பென்றும்

காதலென்றும் சொல்வேன்.

தாங்கிக்கொள்ள முடியாத

அதனை நேசிக்கச் செய்ததும்

அப்பெயரே.

பார்க்கும் இடமெல்லாம் ஒளிரும்

லாவகம் கொண்டது அப்பெயர்.

செங்குத்தாக உயர்ந்து பறக்கும் வலியையும்

பின் மிதத்தலின் சுகத்தையும்

காற்றில் சருக்கிக் கீழிறங்கும்

புன்னகையையும் இயல்பாகக் கொண்டது.

கவிதையின் கட்டுமானங்களைக்கடந்து

விழிகளை மூடி ஒரு ஏகாந்தம்

வெறுமையின் நிறைவில்

காற்றொடு உருண்டு

தலைக்குள் மெள்ள மிதக்கும்

விரக்தியும் சிறு நம்பிக்கையும்

அப்பெயரின்றி இல்லை.

ஆம் அதுவொரு

பைத்தியகாரத்தனத்தின் உறுபயன்.

எல்லாம் இழந்த பிறகு எஞ்சினிற்கும்

சிறு உதடுசுளிப்பு.

குழந்தைகள்

வயதானவர்கள்

குயில்கள்

ரயில்

பௌர்ணமி

கவிதைகள்

என எங்குமாய்த்திளைத்து

கைகொட்டி விழிவிரியும்

சிரிக்க சிரிக்க

மரணிக்கும் அனுபவம்.

0
Posted in Uncategorized |
November 20th, 2011


 

 

 

 

 

 

 

 

.

 

நனைந்துவிடாமல்
மழைத்துளிகளிடையே
பறந்து திரியும் ஈசல்களின்
லாவகம் காட்டுகின்றன
உன் சொற்கள்.
அப்படியா என்று கேட்டால்
ஆமாமாமாமா என்று
மாமாவில் முடிக்கிறாய்.
கிறுக்கா என்றால்
இருக்கிறுக்கிறுக்கிறுக்கு என்றே
கிறுக்கில் நிறுத்தி
புன்னகைத்து முகம் பார்க்கிறாய்.
சொற்சேர்க்கையில் நிகழ்கிறது ஒளிச்சேர்க்கை
மற்றும்
மாயக்கண்ணாடியைக் கொண்டிருக்கும்
என் குட்டி இளவரசிக்கு
பூதகி என்றும் பெயர்.


0
Posted in Uncategorized |
November 20th, 2011
                                           ஓவியம்: அவனீஷ்வரன்
ஓவியம்: அவனீஷ்வரன்

 .                               

பெருங்கடலைக் கிள்ளிப் பார்க்கும்
சிறுபிள்ளைச் செயலென நீள்கிறது சிலவரிகள்.
ஒளிரும் இரவு ஒளிரும் இரவென்று
கவிதைகளும் ஜீவிகளும் சொன்னபோது
எனக்கது புரியவில்லை
வெற்று வார்த்தைகளே உட்சென்று வந்திருந்தன.
இரவில் விழித்திருப்பவர்களையும்
அதனைக் கொண்டாடுபவர்களையும்
போதையாளர்கள் என்று கூட எண்ணியதுண்டு.
இன்றிரவு எனக்கது
நிகழத்துவங்குகிறபோதுதான்
இவ்வளவு அழகானதா
இவ்வாழ்வெனத் தோன்றியது.
உணர்வு அறிவு ஞானம் எண்ணம் நான்
என் விரல்கள் நகத்தின் நுனி என
எல்லாமும் ஒளிர்ந்த கணங்கள் அவை.
மெல்ல வியாபிக்கும்
அதன் சுகந்தம் உணரத்தலைப்பட்டேன்.
என்ன ஏகாந்தம் என்ன இனிமை என்ன ஒளி
என்ன மிளிர்வு என்ன சாகசம் என்ன கரைதல்
தாவோவின் நெகிழ்வுத்தன்மையிலும்
ஒஷோவின் விளையாட்டுத்தனங்களிலும்
லயித்துச் சுகித்து ஓடித்திரிந்தேன்.
வலிகள் ரணங்கள்
சிலது ஓவியமாகவும்
பலது கரைந்தும் காணப்பட்டன.
அதைத் தந்தவர்கள் குறித்து யோசிக்க முனைந்ததும்
சிறு காற்றசைவில் கரைந்திடும் முகங்கள்
அவர்களதுடையது மாதிரியே இருந்ததும் மாயவரம்தான்.
தவிர அவர்களெங்கே கொடுத்தார்கள்
பெற்றுகொண்டது நானல்லவா..
ஆரஞ்சு மிட்டாயின்
சாறுவழிந்திடும் உதடுகளோடு ஒருத்தி
பாஸோவின் தவளையாய்
துள்ளிக்குதித்து ஓடுகிறாள்
நானோ துரத்தாமல் ரசித்துக்கொண்டிருக்கிறேன்.
தவளை திரும்ப இக்குளத்திற்குவந்து
மிக வழக்கமாய் விழும்
என்றெனக்கு நன்கு தெரிந்திருக்கிறது.
எப்படித்தெரிந்தது என்றொரு
கேள்வியைக் கேட்டுப் பார்த்துக் கொண்டேன்
வார்த்தைகளுக்குப் பதிலாய்
சந்தோஷமே வரிசைகளின்றி வந்து விழுகின்றன.
எங்கே போனாலும்
தவளையின் கொண்டாட்டம்
மழையோடுதானே..!
படுத்துவதும் பெறுவதும்
பேரன்பென மழைதானே சொல்லிக் கொடுத்தது..?
கதை சொல்லும் உத்தியோடு
ஒரு குரல் என்னிடம் ஏதோ சொல்லிப் போகிறது.
கதையில் மிகச்சரியாய் எதுவும் இல்லை
ஆனால் அற்புதமானதாயிருக்கிறது
அணுவணுவாய் ரசிக்க முடிகிறது
அக்குரலை நேசிக்கத்துவங்குகிறேன்
அது வழிந்தோடும் தருணங்களில்
அதுவறியாமலேயே உடன் பயனிக்கிறேன்.
ஒரு நீள் கவிதையொன்று உடன் வருகிறது
நான் எழுதிக்கொண்டிருப்பதுதான்..
உடன் அதனைப் பரிசளிக்கத் தோன்றியது.
மனசுக்குப் பிடித்தவர்களுக்கு
பரிசளிக்கத்தானே கவிதைகள்!
முழுமையான அன்பும்
அன்பின் சக்தியும்
பொங்கி வழியும் பரிசுகள் அலாதியானவை.
பனி என் மேனியெங்கும்
மிக மெதுவாய் ஒரு நத்தை போல
நகர்ந்துகொண்டிருக்கிறது.
சுவாசம் மிக நிதானமாய்
ஒரு நடனதிற்கான ஒத்திகை பார்க்கிறது.
எது விரகம்… நிலைவைக் காதலிப்பதா…
வைத்துக்கொள்ளட்டுமே
யாருக்கென்ன நஷ்டம்….
தீராத என் காதல் தீராதது
அவனொரு அவன் என்பதைப் போல.
அகல் விளக்குகள் எரியும்
கார்த்திகை மாதத் தெருவில் நடப்பதைப் போலிருந்தது
இது என்ன
எனக்கு மட்டும் மாதத்தில் இரண்டாம் பௌர்ணமி
சரி.. படுத்துவதர்க்கும் பெறுவதற்க்குமாய்
இந்த குட்டிப் பையனை மன்னிக்கலாம் தானே …
மௌனத்தின் அடர்த்தி…
ஓ என்ன செய்வேன்
கவிதைக்கணங்கள் விண்ணிலிருந்து பறந்து வந்து சேர்கின்றன
கொஞ்சம் கொஞ்சமாய் நானதைப் பருகத்துவங்குகிறேன்
பற்றியிருக்கும் கோப்பை எனக்குப் பிடித்தமான ஒன்று
அதைக் கூடவா காதலிப்பான் ஒருவன்
நான் செய்கிறேன்.
மடிக்கணினியில் கொஞ்சம் யுவனைக் கேட்கிறேன்
ஆம் அவனையும் தான் காதலிக்கிறேன்
வலியும் புதுமையும் செவ்வடியும்
உணர்வைச்சுண்டுவது அவனியல்பு.
ஒரு கவிஞனாயிருந்து இசையில்
உருகித்திளைப்பதைத்தான் எப்படிச்சொல்ல..

நிறைய யானைகளும்
நிறையக் குழந்தைகளும் வந்து போனார்கள்
அதன் கண்கள்தான் ”எவ்லவ் பெரிஸ்“.

 

தீவிரம் ஊற்றெடுக்கும்
உக்கிரப் பெருவெளியில்
சொற்களில் மயங்கிக் கதறும்
ஒரு கிளியானேன்
இரவு முழுக்க
எழுத எழுத வார்தைகள்
ஒளியோடு கரைந்து கரைந்து விளையாடுகிறது
சமநிலையும் நெகிழ்வுத்தன்மையும்
வாய்க்கவென உள்முகமாய்
ஒரு பயணம் போகிறேன்
வராத முழுமையும் வந்துவிட்ட
கொண்டாட்டமும் மகிழ்ச்சியைக் கூட்டுகிறது
இங்கேயே இப்போதே வாழ்ந்துபாரென
உள்தன்மை கிளர்வூட்டுகிறது
துய்க்கத் துய்க்க
அதுவொரு பெரிய சவால்தான்.

20+10=0?100=1+1=100

என்பது போன்ற அரூபப் படிமங்கள்
ஒரு மாயவித்தைக்காரனின் விரல்கள் போல
விழிகளின் முன் தோன்றி மறைகின்றன.

Passion + risk readiness+intutiv judjement

என்பதை உள்ளங்கைகளில் குறித்துவைத்துக் கொள்கிறேன்.
வன்மையில்லாமல்
தோற்கடிக்க முனையாமல் அதனனைச் சுகிக்கும்
முதல் முறையையும் பின்வரும் முறைகளையும்
பின்குறிப்புகளென நினைவில் கொள்கிறேன்.
உணரத்தலைப்படு- என்றொரு வார்த்தை
அசரீரி போல வந்து விழுகிறது.
ஜென் கண் திறக்கிறது.
ஆழ்ந்து அனுபவித்து சிலாகித்து முத்தமிட்டு
வாஞ்சையாய்க் கைகுலுக்கி
மரணத்தைத் தொட்டுத்தீண்டிப் படர்ந்துணர்ந்து
தனியொரு யோகமெனப் புரியத்துவங்கிய
அதன் பின்னிரவில்
மிகச் சாவகாசமாய்
என் கைகளையும் கால்களையும்
மிகச் சௌகர்யமாய்
அதன் மீது போட்டு
பேரன்புடன் கட்டியணைத்து
தூங்கத் துவங்கினேன்
என் ஒளிரும் இரவை
மழை தவளை ஜென் நானுமென.

 

 

0
Posted in Uncategorized |
November 18th, 2011

 

1.

நீர் இருக்கும்
கண்ணாடிக் குவளையின்
காலிப் பகுதி
கணக்கத் துவங்கியபோது
எழுத நினைத்தேன்
மரணத்தின் சில குறிப்புகளை.

2.
மரணத்தைக் கொண்டாடுவோம்
வாய்ப்பிருந்தால்
என்னுடையதிலிருந்து
துவங்குவோம்.
3.
கேடுகெட்ட ஒரு தருணத்தில்
உயிர்
மரணிக்கத்துடிக்கிறது
அதீதங்களில் பயணிக்கும் கவிஞன்
என்பதைத்தவிர
வேறென்ன இருக்கிறது அதற்கென.
4.
தாங்கிக் கொள்ள முடியவில்லை
என்று சொல்லத்தான் செய்கிறேன்
ஆனாலும் உயிரோடுதானிருக்கிறேன்.
5.
வெகு அருகில் சந்தித்த அதனை
மரணமென்றே நினைக்கிறேன்
நான் விரும்பியணைத்துக் கொண்டபோதுமது
என்னைவிட்டுத் தள்ளியே நிற்கிறது
இன்னுமேன் தயக்கமென விளங்கவில்லை.
6.
புரியவியலாத நிகழ்வுகளின்
வலியைக் காட்டிலும்
அவ்வளவு அமைதியானதல்ல
இவ்வாழ்வு.
7.
மரணம் பற்றிய பயமெல்லாம் மரணமாகாது
மரண வலியும் ஆகும் மரணம்.
8.
செத்துவிடச் சொல்கிறது ஒன்று
சாகாமல் தடுக்கிறது
ஏதோ ஒன்று.
9.
சட்டென்று ஒருகணம்
அழகாய்த்தோன்றுகிறது
மரணம்
சுயநலவாதிகளென
நான் நிந்திதவர்களைப் போற்றுகிறேன்
அவர்கள் விரும்பியவாறு மரணிக்கும்
ஆற்றல் படைத்தவர்கள்.
என்னுடையது
ஓயாமல் அதிரும்
நொடிமுள்ளிடமல்லவா இருக்கிறது.?
10.
தீராத அலைகளென மரணம்
வந்து வந்து போய்க்கொண்டே இருக்கிறது.
11.
ஆழ்கடலின் அமைதி பற்றி
யாரோ சொன்ன கதையை
மறுபடியும் கேட்க வேண்டும் போலிருக்கிறது.
12.
எனது தொலைபேசிகளை
சுக்கு நூறாய்
உடைத்தெறிய விரும்புகிறேன்
அழியாத சில வார்த்தைகளை
மரணிக்கச் செய்ய.
13.
இழப்பின் கணத்தை
ஏற்றுக் கொள்ள முடியாத மனதை
ஏற்றுக் கொள்கிற மனது
வாய்த்திருந்த போதுமொன்று சொல்வேன்
மரணம்
எனக்கு
பிடித்திருக்கிறது.
14.
கண்ணதாசன் புகைப்படம்
புன்னகைத்துக் கொண்டிருக்கும்
எனதறையில் நான்
மரணத்தைப் பற்றி
சிந்திக்காமலிருந்தால் எப்படி?
15.
தீராத மரணம் தீராதது.
16.
பரிசாய்
வருமா
ஒரு
மரணம்
17.
கலைந்த பார்லே-ஜி பிஸ்கட் வரிசையை
அழகியல் கலந்த குரூரத்தோடு
தின்று முடித்து நீர்குடித்தேன்.
மரணம் பற்றிய
நெஞ்சுத்தீ இன்னும் எரிகிறது.
என் நினைவுகளில் மரணம்
உருண்டு கொண்டேயிருக்கிறது.
18.
தவறிய அழைப்பில் ஒளிர்ந்த
செல்போனால்
நிழலில்
ஒரு மண்டையோடு போல் தெரிந்த
என் தலையை
கொஞ்சம் தொட்டுப் பார்த்துக்கொண்டேன்.
19.
மிகச்சிறந்த ஒரு
நகைச்சுவை போலிருக்கிறது
மரணம்.
20.
கழுவிய
பொழுதில்
நழுவியது
மீனல்ல
மரணம்.
21.
கவிழ்த்திய
சீட்டில்
எதிராளியின்
மரணம்.
22.
செத்துத் தொலையென்ற அம்மாவிடம்
முன்பொருமுறை கேட்டிருக்கிறேன்
“சாவதும் தொலைவதும் வேறுவேறா?”
23.
மரணத்திற்கு ஒரு பெயர் வைக்கவேன்டும்
மரணம் என்பதைத் தவிர
தெரிந்த எல்லாப் பெயர்களையும்
யோசித்தாயிற்று.
24.
மரணம் என்று
உணர்ந்து பார்த்தால்
அவ்வளவு அழகாய் இருக்கிறது
சொல்லிப் பார்த்தால்
ரொம்பவே பயமாயிருக்கிறது.
25.
மரணத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும்
மரணம் மறுபடி வெல்லும்.
26.
மரணித்த உடலில் புகும்
காற்றின் அனுபவம்
என்னவாக இருக்கும்?
27.
இல்லாமல் போகும் மரணம் இருக்கிறது.
28.
குடியும் குடித்தனமும்
அசைவமும் அமர்க்களமுமாய்
இருந்த என்
தாத்தாவின் மரணத்திற்கு
நான் ஏன் அழவேண்டும்?
29.
என்னையறியாமலேயே
எனக்கது பிடித்திருக்கிறது
காரணமெல்லாம் இல்லை
காரியமென்னவோ இருக்கிறது.
30.
உணர்த்தவியலாதது
கவிதையெனில்
மரணமென்பது
மாகவிதை.
31.
அணுவணுவாய் வாழ்ந்த மாதிரியே
அணுவணுவாய் சாகவும் துடிக்கிறேன்.
32.
மரணத்தை நினைத்தால்
மூளைக்குள் கொஞ்சம்
குளிர் சிலிர்க்கும்.
நான் ஞானியென்று
என்னையே ஏய்த்துக்கொள்வேன்.
33.
சொல்லப்போனால்
மரணத்தை
நான் காதலிக்கிறேன்.
34.
காத்திருந்து பெற்றவன் என்பதற்காகவும்
பெரும் மதிப்பு மிகுந்த
உங்களை விட்டு நீங்கியதற்காகவும்
என் மரணத்தை
தயவு செய்து கொண்டாடுங்கள்.
0
Posted in Uncategorized |
November 18th, 2011
1.
அதிகாலைக் குளிரில்
சிறுபறவையொன்று
தன் மெல்லிய அலகால்
கொத்தித் தின்னும்
தானியங்களில் ஒன்றாக
நான் இருக்கக் கூடாதா?
2.
வெகுநாளாய்
நினைவிலிருந்த
பெண்ணொருத்தி
கடந்துபோய் போய்விட்டாள்
தேவீ
என்றழைத்தேன்
ஒரு நூறு தேவிக்கள் திரும்பிப் பார்த்தனர்
பட்டணம் பல்லை இளித்தது.
3.
கு
னு
கு
கு
ம்
எனக்கும்
என்ன இருக்கிறது
எல்லாம்.
4.
அவளொருத்தி
குளிரும்
கதகதப்புமாய்
உள்
பயணிக்கும்
555 புகையென.
5.
நாயோ
என்று
திரும்பிப்
பார்த்தேன்
நிழல்தான்.
6.
தாங்கவியலாப் பிரிவில்
என் மனம்
கணப்போழ்தும்
காற்றில் கலந்திட
துடித்துக் கொண்டே
யிருக்கிறது.
7.
ஒரு
பொருளை
காணவில்லை
நூறு
திருடர்கள்
கிடைத்தார்கள்.
8.
பட்டம் விடும் சிறுவர்களைப் பார்த்ததும்
நினைவு வந்தது
இன்று பௌர்ணமி
தலை உயர்த்திப் பார்த்தேன்
நிலா பறந்து கொண்டிருந்தது
9.
உறங்க மறுக்கிறது உனதழகு.
10.
ரத்தமும் சதையுமான
நம்மைப் பகிர்ந்துகொள்வோம்
உலகக் கவிதைகள் குறித்து
பிறகு யோசிக்கலாம்.
11.
ஒரு மயிரும் செய்யாத கவிதையை நான் ஏன் எழுதிக் கொண்டிருக்க வேண்டும்.
12.
முல்லை மலர்
அறியுமா
பாரியின் தேரை
அதற்கு முன்?
13.
பூஜ்யம்
ஒரு
பிரம்மாண்ட
பூஜ்யம்.
14.
கிணற்றுக்குள்
எட்டிப் பார்த்தேன்
ஒரு
காகம்
தெரிந்தது.
15.
யாருக்கும் தெரியாமல்
ஒளித்துவைத்துவிட்டு
தூங்கப்போனேன்
விடிந்ததும் எழுந்துபார்க்கையில்
அது எல்லோர் கைகளிலும் இருந்தது.
16.
உயிரற்றிருப்பதை
உணர முடிகிறது
உயிரோடிருக்கயிலேயே .
17.
மழை போலவே தான்
இருக்கிறது
மழை பற்றிய தகவலும்.
18.
சொல்லவே முடியாத
உணர்வுகளோடு
அலைந்து கொண்டிருக்கிறேன்
வெகுநேரமாய்
அடித்தொண்டையில் மிதந்துகொண்டிருக்கும்
இந்த
மசாலா டீயின் காரத்தைப் போல.
19.
ஒரு உண்மயைச் சொல்கிறேன்
நம்புவது உங்கள் விருப்பம்
பாதிக்கு மேல்
உண்மையில்லையென்றால்
வட்டம் சதுரமாகிவிடும்
20.
எங்கள் அறைக்கு
குபேரர் படம் போட்ட
ஒரு காலண்டர்
வந்திருக்கிறது.
21.
வெண்சாமரங்கள்
விடுமுறையிலிருக்கின்றன
நிமிர்த்திவைக்கப்பட்டிருக்கிறது 
துடைப்பம்
மந்திரிகள் முணுமுணுப்பது
அரசருக்குக் கேட்காமலா இருக்கும்?
22.
விதவிதமாய் வெளிப்படும்
அம்மாவின் திட்டுக்களைப் போலிருந்தது
நகரப் பேருந்தின்
ஹாரன் சப்தம்.
அடுத்த வாரம்
ஊருக்குப் போகவேண்டும்.
23.
ஒவ்வொருமுறையும்
ஒவ்வொரு கலரில்
டீ போட்டுத்தரும்
எங்கள் தெரு
டீக்கடை மாஸ்டருக்கு
வால்ட் டிஸ்னி என்று
பெயர் வைத்திருக்கிறேன்.
24.
பிரவாகமெடுக்கும்
கீபோர்டின் இசையைப்போல
ஒரு கவிதை
எழுதவேண்டும் போலிருக்கிறது.
25.
பதாகைகள் போல
கொட்டிவைத்திருக்கிறேன்
கொடாங்குச்சிகளை .
26.
யாருமற்ற பொழுதில்
எல்லோருமாகப் பார்த்து
யாருமே இல்லாமல்
நானுமற்றுப் போனேன்.
27.
முத்தங்கள் தீர்ந்த ஒரு
வினாடியில்
அந்தக் குழந்தையைப் பார்த்தேன்
முத்தங்கள் நிறைந்த ஒரு கூடையை
எனக்கது பரிசளித்தபோதுதான்
குழந்தைகள் முத்தங்களின் கடவுள்கள்
என்று தோன்றிற்று.
ஆனாலும் அந்தக் குழந்தை
ஒரு கவிதை கேட்டு
அடம்பிடிக்குமென்று நான்
நினைத்துக்கூட பார்க்கவில்லை.
28.
திறந்த நீரிலிருந்து
வந்த நுரை காணாமல் போய்
கொஞ்ச நேரத்தில்
நான்
அங்கிருந்தேன்
இங்கும் இருந்தேன்.
29.
வெகுநேரக் காத்திருப்பை
கவனித்த மீன்கள்
என்னுடையது
கடலுக்கான தூண்டிலென நினைத்து
அருகில் வரவே மறுத்துவிட்டன.
30.
தினமும்
மின்மயானத்தை சுற்றிப்போகிறேன்
அமைதி
மயான அமைதி.
31.
ரோஜாவின் முகவரி
வனம்
வனத்தின் முகவரி
ரோஜா
ஒன்றின் முகவரி ஒன்று
என்றாகிப்போன ஒன்று.
32.
தாங்கிக்கொள்ளவே முடியாமல்
சில விஷயங்கள் நிகழ்ந்து விடுகின்றன.
சொல்லியோ எழுதியோ அழுதுதீர்த்தோ
எப்படியும் கரைவதில்லை அவை.
எவரின் தோல்சாய்தலிலும்
மறக்காமல் தன்னிஷ்டக் கோடுகளை
வரைந்தழித்துப் பார்த்துக் கொள்கின்றன.
கூடவே உணர்வில்லாத புன்னகையொன்று
ஒட்டினாற்போல வந்துவிடுகிறது.
மெல்லிய காற்றில் வீழுமிலையாய்
தொடுத்துக்கொண்டிருந்தாலும்
அசையும் மனசின் கிளையொன்றில்
ஆழமாய்ப் பதிந்திருப்பதை உணரமுடிகிறது
அவற்றின் நீண்ட நாளைய இருப்பில்.
33.
எங்கள் வீட்டில் அந்த மிருகம்
நுழைந்தேவிட்ட போது
அலறக்கூட இயலாத
வழக்கத்திலிருந்தோம்
மாறாக
தயாராகிக்கொண்டிருக்கும் தேநீருக்கு
சர்க்கரை அளவைப்பற்றி
சொல்வதிலேயே
முனைப்பாயிருந்தோம்.
34.
யார்க்கர் பற்றி
ஒரு கவிதை எழுதவேண்டும்
எவ்வளவு
துல்லியமாக வருமென்று
தெரியாததால்
இப்போதைக்கு ஒத்திப்போட்டிருக்கிறேன்.
35.
எல்லாவற்றிற்கும்
எல்லாமும்
தொலைந்து போயிற்று
அதனதன் பெயர்களைத்தவிர.
37.
இலவசமாய் வந்த ராசிபலன்
இரவல் போய்விட்டது
ஓசியில் வாங்கியவன்
ஒய்யாரமாய் நடக்கிறான்
காசு கொடுத்து வாங்கியவன்
பாவங்களுடன் திரிகிறேன்
கொடுத்த புத்தகத்தை
திருப்பி வாங்கும்
பரிகாரம் தெரியாமல்.
38.
தூக்கத்தில்
சிரிப்பதை
வியாதியென்கிறார்கள்
சிரிப்புதான் வருகிறது.
39.
மனதில் இருப்பதை
இருப்பது போலவே
யாரிடமும்
சொல்லமுடியவில்லை
அப்படி ஏன் முடியவில்லை
என்பதையும் சேர்த்துதான்.
40.
சமூகப் பிரக்ஞை
வேண்டுமென்றான் ஒருவன்
பிரக்ஞை என்றால்
என்னவென்று தெறியாமலேயே
ஆமாம் என்பது போல
தலையாட்டி வைத்தேன்.
41.
கிரிக்கெட் விளையாடத்தான்
புறப்பட்டோம்
மைதானம் முழுக்க
காலியாயிருந்ததால்
ஃபுட்பால் விளையாடத் துவங்கிவிட்டோம்.
42.
ஈசலைப் பிடிக்க
காத்திருக்கும் பல்லியை
உற்றுப் பார்த்தேன்.
கொஞ்ச நேரம்
அதுவும் என்னை
உற்றுப்பார்த்தது.
43.
மின்னலில் ஒளிரும்
மதிற்சுவர் கண்ணாடிகள்
அறிந்திருக்குமா
தன்
இடம் பொருள் காரணத்தை?
44.
‘தீம்தரிகிட தீம்தரிகிட ‘
என்றான் நண்பன் திடீரென்று.
திரும்பிப் பார்த்தேன், நல்லவேளையாய்
ஈட்டிக்காரன் எவனும்
வரவில்லை.
45.
விடுமுறை நாளொன்றில்
வைத்த விநோத ரசமஞ்சரியால்
அடுத்து இவன்
அடுப்படிக்குள்
அனுமதிக்கப்படவேயில்லை.
46.
வாழ்க்கையும்
ஐபிஎல் போலத்தான்.
ஒருகட்டம் வரைக்கும்தான்
லீக் போட்டிகள்
அப்புறம் நாக்-அவுட்தான்..
47.
நீர்மூழ்கிக் கப்பல்கள்
நீரில் மூழ்குவதில்லை
என்பது எவ்வளவு அதீதமோ
அப்படியே என்
நேர்மையும்.
48.
மந்திரம் ஒன்றை
கற்க வேண்டும்
நானே தொலைந்துபோக.
49.
சொல்ல ஒன்றுமில்லை
அல்லது
சொல்ல இயலவில்லை.
50.
நிலவெரியும் காட்டுக்குள்
யாழிசைத்துக் காத்திருக்கிறேன்.
1
Posted in Uncategorized |
1
November 18th, 2011
hello world
0
Posted in Uncategorized |